மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று மாலை 5.30 மணியளவில் தன்னுடைய பிரச்சாரத்தை திருச்சியில் துவக்கினார். முதலில் சிறுக்குறு தொழில் முனைவோருடன் கலந்துரையாடலில் பங்கேற்று பேசிய அவா், அங்கிருந்து புறப்பட்டு, காந்தி மார்கெட், சத்திரம் பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம், சமயபுரம் பகுதிகளில் பொதுமக்கள் முன்னிலையில் பேசினார். அதன் ஒருபகுதியாக சமயபுரம் பகுதியில் பேசிய அவா், " அமைச்சா்களே இன்று கையில் ரூபாய் நோட்டுகளை வைத்துகொண்டு கூட்டத்தை சோ்த்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கு கூடியிருக்கும் நேர்மையாளா்களின் கூட்டத்தில் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இளைஞனாக இருந்த போது உன்னால் முடியும் தம்பி என்ற படத்தில் நடித்திருந்தேன், இன்று சொல்லுகிறேன் தம்பிகளால் முடியும், உங்களால் முடியும். அதை செய்து காட்டுங்கள், எங்கு சென்றாலும் மகளிாின் ஆர்வமான பங்களிப்பு பெரும் நம்பிக்கை கொடுக்கிறது.
ஆண்களுக்கு நிகராக பெண்கள் வந்திருக்கிறார்கள். அதிலும் கைகுழந்தையுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டத்தில் மட்டுமே நடக்கும், வேறு எங்குமே எங்களை நம்பி இப்படி தாய்மார்கள் வந்திருக்க மாட்டார்கள். நான் பல வருடங்களாக அரசியலை கவனித்து வருகிறேன். பெண்களின் பங்களிப்பு என்பது அதிகம் இருக்கிறது. பெண்களின் எண்ணிக்கை விழுக்காடு அதிகம், பெண்கள் நினைத்தால் ஆட்சி மாறும் என்று கூறினார். என்னையும் சொன்னாங்க இந்த கூட்டத்திற்கு நடுவில் ஏன் செல்கிறீா்கள் என்று என்னிடம் பல போ் கேட்டனா். ஆனால் நான் அவா்களிடம் சொன்னது கூட்டத்திற்குள் நான் போகவில்லை என் குடும்பத்திற்குள் போகிறேன் என்று சொன்னேன். எனவே குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக பார்த்து கொள்ளுங்கள், இதுபோன்ற கூட்டங்களுக்கு அவா்களை தூக்கி வராதீா்கள். எனவே அடுத்த தலைமுறை அவா்களுடையது, இளைய தலைமுறையின் கூட்டம் எங்களை நம்பி சேர ஆரம்பித்துள்ளனா். மாற்றத்திற்கான விதையை நீங்கள் தான் தூவ வேண்டும். அதற்கு தயார் ஆகுங்கள், தீமைக்கு எதிராக உங்களுடைய ஓட்டை குத்துங்கள்" என்று பேசி முடித்தார்.