மதுரையில் ராமராஜ்ஜிய ரத யாத்திரையை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தொடங்கி வைத்தார். மதுரையில் இருந்து மானாமதுரை, பரமக்குபடி வழியாக ராமேஸ்வரத்திற்கு ரதயாத்திரை செல்கிறது.
அப்போது பேசிய எச்.ராஜா, மத ஊர்வலத்திற்கு 144 தடை உத்தரவு பொருந்தாது. ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு எதிராகவும், கலவர சூழலை ஏற்படுத்தவும் திராவிடர் கழகம் செயல்படுகிறது. இவ்வாறு கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி விசுவ இந்து பரிஷத் ஆதரவு அமைப்பு சார்பில் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து கடந்த மாதம் (பிப்ரவரி) 13-ந் தேதி ராமராஜ்ய ரதயாத்திரை புறப்பட்டது. இந்த ரதயாத்திரை மத்திய பிரதேசம், மராட்டியம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களை கடந்து கேரள மாநிலத்துக்கு வந்தது.
ராம ராஜ்யத்தை மீண்டும் அமைக்க வேண்டும். ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்ட வேண்டும். கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணத்தை சேர்க்க வேண்டும். தேசிய வாராந்திர விடுமுறை தினமாக வியாழக் கிழமையை அறிவிக்க வேண்டும். உலக இந்து தினம் கொண்டாட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ரத யாத்திரை நடந்தது.
கேரளாவில் இருந்து ராமராஜ்ய ரதம் நேற்று காலையில் தமிழக எல்லையான நெல்லை மாவட்டம் புளியரைக்கு வந்தது. கிருஷ்ணானந்த சரசுவதி சுவாமிகள், சாந்த ஆனந்த மகரிஷி ஆகியோர் தலைமையில் ரத யாத்திரை புறப்பட்டு வந்தது. நேற்று காலை 9.30 மணிக்கு தமிழக-கேரள எல்லையான கோட்டை வாசல் கருப்பசாமி கோவிலுக்கு ரதம் வந்தது. ரதத்தில் ராமர்- சீதை சிலைகள் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தன. பின்னர் ரதம் செங்கோட்டை வந்தது. அதன் பிறகு தென்காசி, கடையநல்லூர், வாசுதேவ நல்லூர் வழியாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வழியாக ராமராஜ்ய ரதம் மதுரைக்கு சென்றது.
மதுரைக்கு சென்ற ரதம், இன்று (புதன்கிழமை) அங்கிருந்து புறப்பட்டு ராமநாதபுரம் வழியாக ராமேசுவரம் சென்றடைகிறது. நாளை (வியாழக் கிழமை) ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு நெல்லை வழியாக வந்து கன்னியாகுமரி சென்றடைகிறது. 23-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் வழியாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்கிறது.