பிரபல தனியார் வங்கியான, 'லட்சுமி விலாஸ் பேங்க்' தமிழகம் முழுவதும் பல கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் மருந்து நிறுவனம் ஒன்று ரூ.726 கோடி கடன் வாங்கி இருந்தது. இதுபோலவே வேறு சில நிறுவனங்களும் கோடிக்கணக்கில் வங்கியில் கடன் பெற்றிருந்தது. அந்த நிறுவனங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் லட்சுமி விலாஸ் பேங்க் மிகவும் நிதி நெருக்கடிக்கு உள்ளானது.
இதனால், வங்கியின் தினசரி பரிவர்த்தனையும் பாதிக்கப்பட்டது. இதனால், ரிசர்வ் வங்கியின் பரிந்துரைப்படி, மத்திய நிதி அமைச்சகம் லட்சுமி விலாஸ் வங்கிக்கு, சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, லட்சுமி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், இனிமேல் மாதத்திற்கு ரூ.25 ஆயிரம் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற தகவல் பரவியது. இதனால், வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தற்போது வரை அச்சத்தில் தான் உள்ளார்கள்.
ஈரோடு மாவட்டத்தைப் பொருத்தவரை, மீனாட்சி சுந்தரனார் வீதி, மூலப்பாளையம் திண்டல் உட்பட மாவட்டம் முழுவதும், இந்த வங்கியின் 23 கிளைகள் செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளனர். நிதி நெருக்கடியில் சிக்கி ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ள லஷ்மி விலாஸ் வங்கியின் சர்வர்கள் முடக்கப்பட்டுள்ளன. இதனால், வாடிக்கையாளர்களுக்கான ஏ.டி.எம்., வங்கியின் நேரடி மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அடுத்த மாதம் 16ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாய் வரை தங்களது வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் வங்கியின் சர்வர் முடக்கத்தால், ஈரோட்டில் 18ஆம் தேதி லஷ்மி விலாஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனை செய்ய இயலாமல் பெரும் சிரமப்பட்டனர்.
பலரும் மாவட்டத்திலுள்ள அந்தந்த வங்கியின் கிளைகளுக்கு நேரில் சென்று, வங்கியின் நிலையை அறிந்து கொள்வதற்காகப் பதட்டத்துடன் விசாரித்துச் சென்றனர். அவர்களை வங்கி ஊழியர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனாலும், முறையான விளக்கம் வங்கி தலைமையகத்திலிருந்து தெரிவிக்கப்படவில்லை என்றே வரவு செலவு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், வங்கி நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டினார்கள். இந்த ஒரு வங்கியை மட்டுமே நம்பி தொழில் செய்பவர்கள், மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், வீட்டுச் செலவுகளுக்குக் கூட 25 ஆயிரம் ரூபாய் போதுமானதல்ல என்றும் கவலை தெரிவித்தனர். 19ஆம் தேதிக்குள் வங்கியின் சர்வர் செயல்படும் என வங்கி ஊழியர்கள் தரப்பில் கூறப்பட்டிருகிறது.