கடலூர் மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம், மன்ற கட்டடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திருமாறன் தலைமை தாங்கினார். மாவட்டத் திட்டக்குழுச் செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பேசிய ம.தி.மு.க உறுப்பினர் கந்தசாமி, தி.மு.க உறுப்பினர் சக்திவிநாயகம் ஆகியோர், "மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டும் எந்தப் பணிகளும் நடக்கவில்லை. இதை எந்த அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. பள்ளிக்கூடங்களில் சேதமடைந்த கட்டடங்கள் இடித்து, அதன் பிறகு புதிய கட்டடங்கள் கட்டப்படவில்லை. இதனால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
இதற்கு பதில் அளித்து பேசிய மாவட்ட ஊராட்சித் தலைவர் திருமாறன், "மாவட்ட ஊராட்சியில் போதிய நிதி இல்லை. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் நிதி கேட்டு இருக்கிறோம். வந்ததும் பள்ளிக்கூடங்களுக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
பா.ம.க உறுப்பினர் சண்.முத்துகிருஷ்ணன் பேசுகையில், "மாவட்ட ஆட்சியர், மாவட்ட கவுன்சில் கூட்டத்துக்கு வருவதில்லை. அவர் வந்தால்தான் மற்ற அதிகாரிகளும் வருவார்கள். அதன்மூலம் மக்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படும். என்.எல்.சி நிறுவனத்திற்காக மேலும் 10 கிராமங்கள் முழுமையாக கைப்பற்றப்பட உள்ளதால் அவர்களுக்கான முழுமையான இழப்பீட்டை உறுதிப்படுத்த வேண்டும்" என்றார்.
அதற்கு பதில் அளித்த மாவட்ட ஊராட்சித் தலைவர், "மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அவர் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும், மாவட்டத் திட்டக்குழுக் கூட்டத்தில் மட்டுமே அவர் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவித்துவிட்டார்" என்று கூறினார்.
பா.ம.க கவுன்சிலர் தமிழரசி பேசுகையில், "உக்ரைன் போரினால் பாதிக்கப்படும் இந்தியர்களை விரைந்து அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்த வேண்டும்" என்றார்.