தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுமென இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொட்ர்ந்து அரசியல் கட்சிகள் அதற்கான ஆயத்தப்பணிகளை செய்துவருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட அமுதுண்ணாகுடி, நெடுங்குளம், செட்டிகுளம், கொம்பன்குளம் ஆகிய நான்கு கிராமங்களும் சுமார் 3,500க்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டது. இந்தக் கிராமங்களுக்கு முறையான சாலை வசதி மற்றும் பேருந்து போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சுமார் 10 ஆண்டுகளாக தங்களுக்கான அடிப்படை வசதிகைளப் பலமுறை கேட்டும் செய்து தராததால் இப்பகுதி மக்கள் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
அமுதுண்ணாகுடி, நெடுங்குளம், துவர்க்குளம் வரையிலான சாலைகள் சேதமடைந்திருப்பதால் மக்களின் போக்குவரத்திற்கு கடுமையான சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனை செம்மைப்படுத்தி போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் தரும்படி பல முறை யூனியன் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும் கண்டுகொள்ளப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
10 ஆண்டு காலமாகப் போராட்டம் நீள்வதால் நான்கு கிராம மக்களும் வரும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பு செய்வதாக முடிவெடுத்து அதற்கான தட்டிப் போர்டுகளையும் வைத்துள்ளனர். மேலும் தங்களின் கிராமங்களில் கருப்பு கொடியையும் ஏற்றியுள்ளனர். சாத்தான்குளம் ஒன்றியக் கவுன்சிலர் ப்ரெனிலா கார்மல், நெடுஞ்சாலை பாதுகாப்பு நுகர்வோர் குழு உறுப்பினர் போனி பாஸ் ஆகியோர் தலைமையில், மேற்கண்ட நான்கு கிராம மக்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் வருகிற சட்டப் பேரவை தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து மாவட்டக் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதி கிராமங்கள் பரபரப்பாகக் காணப்படுகிறது.