கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ளது மீனாட்சி பேட்டை கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த கங்காதுரை. கூலி தொழிலாளியான இவரது மனைவி செல்லம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 27. இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு, குறிஞ்சிப்பாடி அருகில் உள்ள கன்னித் தமிழ்நாடு என்ற ஊரைச் சேர்ந்த சக்திவேல் என்பவருடன் செல்லம் சென்றுள்ளார். இவர்கள் இருவரும் தனியாக ஒரு வீடு பார்த்து கணவன் மனைவி போல சில மாதங்கள் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
செல்லம் உறவினர்கள் செல்லத்திடம் கணவர், இரு பிள்ளைகளையும் விட்டுப் பிரிந்து தவறான முறையில் யாரோ ஒருவருடன் சென்று குடும்பம் நடத்துவது முறையாகுமா? உன் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி கணவருடன் சேர்ந்து வாழ்வது தான் நல்லது என்று அறிவுரை கூறியுள்ளனர். தனது தவறை உணர்ந்த செல்லம் மீண்டும் தனது கணவருடன் சென்று குடும்பம் நடத்தி வந்தார்.
நேற்று கங்காதுரை அவரது மனைவி செல்லம் மற்றும் அவரது நண்பர்களுடன் தினக்கூலி வேலைக்கு செல்வதற்காக மீனாட்சி பேட்டை அருகே உள்ள அய்யனார் கோயில் அருகே நின்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சக்திவேல் கங்காதுரையுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சக்திவேல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கங்காதுரையின் தலையில் வெட்டியுள்ளார். இதனை தடுக்க முயன்ற அவரது மனைவி செல்லத்தையும் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார் சக்திவேல்.
இதுகுறித்து செல்லம் குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்துள்ளனர். தவறான வாழ்க்கைக்கு சென்று திருந்தி திரும்பி வந்தவரை வாழ விடாமல் அவரது கணவரை கொலை செய்யும் நோக்கத்தோடு சக்திவேல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.