Skip to main content

அதிமுக அலுவலக ஆவணங்களை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Published on 04/05/2023 | Edited on 04/05/2023

 

High Court order to handover AIADMK office documents to CV Shanmugam

 

கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி காலை இபிஎஸ் தரப்பில் பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்ட நிலையில், பொதுக்குழு தீர்ப்பு வர சில நிமிடங்களுக்கு முன்பு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தினுள் அத்துமீறி பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அதனைத் தொடர்ந்து ஓபிஎஸ்-ம் தலைமை அலுவலகத்திற்கு வந்தார். 

 

அதே சமயம் அதிமுக அலுவலகத்தில் ஓபிஸ், இபிஎஸ் தரப்பினர் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். இதனை அடுத்து அங்கு விரைந்த வட்டாட்சியர், கலவரத்தைத் தடுக்கும் பொருட்டு ஓபிஸ், இபிஎஸ் ஆதரவாளர்களை வெளியேற்றி அதிமுக தலைமை அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்தார். அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதலில் ஓ.பி.எஸ் தரப்பினர் கட்சியின் ஆவணங்களை எடுத்துச் சென்றதாக போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த கலவரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

 

இதனிடையே அதிமுக அலுவலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்களை எல்லாம் ஓ.பி.எஸ் தரப்பினர் சென்னை சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.  இந்த நிலையில் இந்த பொருட்களைக் கேட்டு சி.வி சண்முகம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் கலவரம் தொடர்பாகச் சென்னை  உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், சிவி சண்முகத்தின் மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து சி.வி. சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அதிமுக அலுவலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட அனைத்து ஆவணங்கள் மற்றும் பொருட்களையும் மனுதாரர் சி.வி சண்முகத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்