இறந்தவரின் உடலை பிணவறையில் வைப்பதற்கு ரூ.1000 லஞ்சம் வாங்கியதாக நள்ளிரவில் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் இறந்தவரின் உடலைப் பிணவறையில் வைக்க ரூ.1000 லஞ்சம் வாங்கியதாக இறந்தவரின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். நுரையீரல் பிரச்சனை காரணமாக மனோகரன் என்பவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூச்சுத் திணறல் காரணமாக நேற்று உயிரிழந்தார்.
உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல உறவினர்கள் ஆயத்தமானபோது பிரேதப் பரிசோதனை செய்த பின்புதான் உடலைக் கொடுப்போம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடலைப் பிணவறையில் வைக்க இளையராஜா என்பவர் 1000 ரூபாய் லஞ்சமாக வாங்கியுள்ளார். இளையராஜா அதே மருத்துவமனையில் மருத்துவ உதவிப் பணியாளராக பணிபுரிகிறார்.
1000 ரூபாய் கொடுத்ததற்கான ரசீதை உறவினர்கள் கேட்டுள்ளனர். அதற்கு இளையராஜா ரசீதை கொடுக்காததால் லஞ்சம் பெற்ற இளையராஜாவை கைது செய்யக்கோரி இறந்தவரின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பின் காலையில் நடந்த உடற்கூராய்விற்குப் பின் உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.
இது குறித்து உறவினர்கள் செய்தியாளர்களைச் சந்திக்கையில், “டாக்டரிடம் கேட்டால் அரசிடம் சென்று கேளுங்கள் என்று கூறுகிறார். பிணவறையில் உடலை வைக்க வேண்டுமானால் 1000. எதுவும் செய்யாமல் உடலைக் கொடுத்தனுப்பினால் 2000 ரூபாயும் கேட்கின்றனர். பணியிலிருந்த பணியாளர் மீதும் மருத்துவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். மற்றொருவர், “மதியம் 2 மணிக்கு வந்தோம். இப்போ மணி 7. இன்னும் பாடிய தரவில்லை” என்கிறார் கோபத்துடன்.