நடிகை கௌதமி பாஜகவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் தனது ரூ. 25 கோடி மதிப்பிலான சொத்துகளை பாஜகவைச் சேர்ந்த அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து அபகரித்துவிட்டதாக மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரில், “நான் திரைத்துறையில் சம்பாதித்த பணத்தின் மூலம் சில இடங்களில் நிலம் வாங்கினேன். கடந்த 2004 ஆம் ஆண்டு நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, எனது மகளின் பராமரிப்பு செலவுக்காகவும், எனது மருத்துவச் செலவுக்காகவும் அந்த இடங்களை விற்க முடிவு செய்தேன். அதற்கு பாஜகவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் அழகப்பன் என்பவர் உதவி செய்வதாக கூறினார். அதனால் எனது சொத்துகளை விற்கும் உரிமையை அவருக்கு கொடுத்தேன். அதற்காக என்னிடம் பல பத்திரங்களில் கையெழுத்து வாங்கினார். ஆனால் அதன் மூலம் போலி பத்திரங்களைத் தயார் செய்து, அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் எனது சொத்துகளை அபகரித்துவிட்டனர். இது குறித்துக் கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்” என்று குற்றம் சாட்டியிருந்தார். இதனிடையே, நடிகை கெளதமி பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்தார்.
இதையடுத்து கௌதமி கொடுத்த புகாரின் அடிப்படையில், பாஜக பிரமுகர் அழகப்பன், அவரது மனைவி நாச்சாள் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, சதீஷ்குமார் ஆகிய 5 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல நாட்கள் தலைமறைவாக இருந்து வந்ததால், மூன்றுக்கும் மேற்பட்ட தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். மேலும் அவர்களின் இடங்களிலும் போலீஸார் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்கள் மற்றும் பணத்தை மீட்டனர். பின்பு லுக்கவுட் நோட்டீஸும் வழங்கப்பட்டது.
இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன் ஜாமீன் கோரிய நிலையில், அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார், கேரளா திருச்சூருக்கு சென்று அழகப்பன், அவரது மனைவி நாச்சாள் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, கார் ஓட்டுநர் சதீஸ்குமார் ஆகியோரை கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்திருந்தனர். இதனையடுத்து, அழகப்பனை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இந்த நிலையில், கெளதமியிடம் மோசடி செய்த அழகப்பனை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், சென்னையில் மட்டும் கடந்த 7 நாட்களில் அழகப்பன் மற்றும் வெவ்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என மொத்தம் 19 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.