குமுதம் வார இதழின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் (வயது 55) மாரடைப்பு காரணமாக, சென்னையில் உள்ள இல்லத்தில் காலமானார். இவரது மறைவுக்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மூத்த ஊடகவியலாளரும் குமுதம் வார இதழின் ஆசிரியருமான ப்ரியா கல்யாணராமன் என்கிற க.ராமச்சந்திரன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
முப்பதாண்டுகளாக குமுதம் இதழில் பணியாற்றி வந்த அவர் பல நூல்களை எழுதியிருப்பதுடன் பல எழுத்தாளர்களையும் ஊக்குவித்தவர் என்பதை ஊடக உலகினர் நன்கறிவார்கள். குமுதம் இதழைக் காலத்திற்கேற்ப நவீனப்படுத்தி வந்ததில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.
ப்ரியா கல்யாணராமன் அவர்களின் திடீர் மறைவால் துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும், குமுதம் நிறுவனப் பணியாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.