புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சி.குணசேகரன் ,ரா.செல்வின்ராய், ப.மணிமேகலை, சி.உமையாள் பார்வதி உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் செம்மல் விருது வழங்கும் விழா வட்டாரத்தலைவர் சு.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத்தலைவர் முத்துசாமி மாவட்ட செயலாளர் ராஜாங்கம் மாவட்டப்பொருளாளர் செந்தில்குமார் , மாவட்ட மகளிரணி தலைவி நாகலெட்சுமி, கல்வி மாவட்ட தலைவர் புதுக்கோட்டை நாடி முத்து, , அறந்தாங்கி கோவிந்தராஜன் கல்வி மாவட்ட செயலாளர்கள் எஸ்.செந்தில் குமார், , டி. தனபால் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை மாவட்ட அமைப்பு செயலாளர் முத்துக்குமார் ஒருங்கிணைத்தார்.
மாநிலத்தலைவர் கு. தியாகராஜன் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி , மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் க.குணசேகரன், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அலெக்ஸ்சாண்டர் , கூடுதல் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் வெங்கடாசலம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விருது பெற்ற ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டி பேசினர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் , மாநில துணைத்தலைவர் பன்னீர் செல்வம் , மாநில சட்ட ஆலோசகர் க.ராஜா , மாநில செயற்குழு உறுப்பினர் டி.ஜெகதீஸ்வரன் வாழ்த்தி பேசினர். இதில் பேசிய மாவட்டக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி பேசியபோது ஒவ்வொரு ஆசிரியரும் நேர மேலாண்மையை பின்பற்ற வேண்டும் என்று பேசினார். தொடர்ந்து பேசிய மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பேசும்போது இது போன்ற விழாக்களை நாம் நடத்துவதன் மூலம் மனித நேயத்தையும் சக மனிதர்களை பாராட்டும் உயரிய பண்பும் வளரும் என்றார். இதனைதொடர்ந்து வட்டார பொருளாளர் நன்றி கூறினார்.
இதனைத்தொடர்ந்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் செய்தி தொடர்பாளர் கு.தியாகராஜன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அரசு எங்களது முக்கிய கோரிக்கைகளான பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட எந்த ஒரு கோரிக்கையையும் நிறைவேற்றிட எவ்வித நடவடிக்கையையும் அரசு செய்யாத காரணத்தால், ஜாக்டோ ஜியோவின் முடிவின் படி, பல லட்சம் ஊழியர்களைக்கொண்டு கோட்டை முற்றுகை போராட்டம் வருகிற மே 8 அன்று திட்டமிடப்பட்டபடி நடக்கும் என்றார். கோட்டை முற்றுகை போராட்டத்தை தமிழக போராட்ட வரலாற்றில் மிகுந்த வீரியமிக்கதாக முன்னெடுக்கும் வகையில் மண்டல வாரியாக ஆயத்த மாநாடுகள் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அனைத்து ஜாக்டோ ஜியோ தோழமை இயக்க தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.அதில் கோட்டை முற்றுகையிடுவதற்கான அவசியம் குறித்தும் அரசின் கையாலாகத்தனம் குறித்தும் ஊழியர்களுக்கு விளக்கமளிக் கப்படவுள்ளது.
தற்போது பணிநிரவல் என்ற பெயரில் ஆண்டுதோறும் ஆசிரியர்கள் இடமாற்றப்படுவதால்,மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாவதோடு அவர்களின் குடும்பங்களும்,குழந்தைகளின் கல்வியும் நிலையற்றதாகி விடுகிறது. இதனைக்கருத்திற்கொண்டு பணி நிரவலை அறவே கைவிட வேண்டும் எனவும்,குறைந்தபட்சமாக ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இது போன்ற பணி நிரவல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் அரசு முன் வரவேண்டும் என்றார் . பேராசிரியை சர்ச்சை குறித்து கேட்டபோது பேராசியை விசயத்தில் உரிய விசாரணை செய்து சம்பந்தபட்ட உயர் அலுவலர்களின் மீதும் பாரபட்சமற்ற நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும், அதே நேரத்தில் இது காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடவும்,ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் நடந்த போராட்டங்களை மடைமாற்ற செய்யப்பட்ட சூழ்ச்சியா என்பது போகப்போகத்தான் தெரியும். என்றார்.