சிவகாசியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி “இருமொழிக் கொள்கைதான் அண்ணாவின் கொள்கை. அதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. இதில், மாறுபட்ட கருத்து இல்லை. இந்தி திணிப்பு என்பது தமிழகத்தில் நடக்காது. இந்தியைப் படிக்கலாம். ஆனால், இந்தியைத் திணிக்க முடியாது.
கட்டாய பாடமாக்க முடியாது. அப்படி ஒரு நிலைமை வந்தால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகப் போராடுவார். நடந்த தேர்தலில் திமுக அளித்த பொய்யான வாக்குறுதியை நம்பி மக்கள் ஒரு நிலைப்பாடு எடுத்தார்கள். தற்போது புரிந்துகொண்டார்கள். வரும் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பை பிரகாசமாக அளிப்பார்கள். அதிமுகவில் உட்கட்சி பூசல் கிடையாது. எடப்பாடியாரும் ஓ.பி.எஸ்.ஸும் ஒற்றுமையாக திட்டங்கள் தீட்டுகிறார்கள். நிர்வாகிகளை நியமிக்கிறார்கள். இணைந்துதான் செயல்படுகிறார்கள்.
ஒருசில காரணங்களுக்காக ஒரு அமைச்சர் என்ற கருத்தை வைத்திருக்கிறார்கள். எங்களிடம் சீனியர் லீடர்கள் இருப்பதால், இரண்டு பேர் மூன்று பேர் கேட்டிருக்கிறார்கள். அதனால்தான் ஏற்பட்டதே ஒழிய, கொடுக்கக்கூடாது என்று மத்திய அரசும் நினைக்கவில்லை. வாங்கக்கூடாது என்று நாங்களும் நினைக்கவில்லை. முதல்வர் எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் எடுக்கின்ற முடிவுதான் இறுதி முடிவு. அவர்கள் எடுக்கும் முடிவை கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் ஏற்றுக்கொள்வார்கள். உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தமட்டிலும் அதிமுக பெருவாரியான இடங்களில் வெற்றிபெறும். நாங்குநேரி நிலவரத்தை அங்கு சென்றபிறகுதான் தெளிவாகச் சொல்லமுடியும்.” என்றார்.