கோயம்பேட்டிலிருந்து நாகர்கோயில் சென்ற பிரபல கே.பி.என். டிராவல்ஸ் டிரைவர் குடித்துவிட்டு பேருந்தை ஓட்டியதால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, நக்கீரனை தொடர்புகொண்ட பயணிகள் நம்மிடம் பதைபதைப்போடு, "கோயம்பேட்டில் இன்று(2019 மே-21) இரவு 8 மணிக்கு எடுக்கவேண்டிய பேருந்தை எடுக்காமல் டிரைவர் கதிரேசன் ஷட்டரை இறக்கி பூட்டிவைத்திருந்தார். அந்த பேருந்து எண் AR01T9919. பயணிகள் அனைவரும் சத்தம்போட்டபிறகுதான் பேருந்தையே எடுத்தார். எடுக்கும்போதே ஒரு வாகனத்தில் இடித்துவிட பார்த்தார். அதற்குப்பிறகு, பேருந்து தாறுமாறாகத்தான் ஓடியது. ஒரு கட்டத்தில் பெருங்களத்தூர் வந்ததும் பேருந்தை நிறுத்திவிட்டு வெகுநேரம் ஆகியும் டிரைவர் கதிரேசன் பேருந்தை எடுக்கவில்லை.
இந்நிலையில், அங்கிருந்த போக்குவரத்து போலீஸார் வந்து டிரைவிரிடம் போக்குவரத்து நெரிசலாவதால் பேருந்தை எடுக்கும்படி சொன்னார்கள். ஆனால், போலீஸாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, சந்தேகமடைந்த போலீஸார் பரிசோதித்தபோதுதான் டிரைவர் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டியது தெரியவந்து அதிர்ச்சி அடைந்தோம்.
இத்தனை பேரும் டிரைவரை நம்பித்தான் பயணக்கட்டணத்தை செலுத்தி பேருந்தில் ஏறுகிறோம். ஆனால், கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் குடித்துவிட்டு பேருந்தை ஓட்டியிருக்கிறார் கே.பி.என் டிராவல்ஸ் டிரைவர். 14 நேரம் இரவுப்பயணம். நல்லவேளை பெருங்களத்தூர் போக்குவரத்து போலீஸாரால் உயிர்தப்பினோம். இல்லையென்றால், விபத்துக்குள்ளாகியிருப்போம்" என்கிறார்கள் அச்சம் விலகாமல்.
இதுகுறித்து, டிரைவரை கைது செய்த பெருங்களத்தூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதியை தொடர்புகொண்டு நாம் பேசியபோது, "போக்குவரத்துக்கு இடஞ்சலாக பேருந்தை நிறுத்திவைத்திருந்ததோடு ஏடகூடமாக பேசியதால் சந்தேகமடைந்து பரிசோதித்தபோதுதான் குடித்திருப்பதை கண்டறிந்து கைது செய்து மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுதியுள்ளோம்" என்றார்.
இந்நிலையில், மாற்றுப்பேருந்து கேட்டு பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதோடு அலட்சியத்துடன் செயல்பட்ட கே.பி.என் டிராவல்ஸ் உரிமையாளர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.