Skip to main content

அருப்புக்கோட்டை அருகே இருபிரிவினர் மோதல்! வானத்தை நோக்கி சுட்ட போலீஸ்!

Published on 04/01/2020 | Edited on 04/01/2020

ஜனவரி 3, வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்காக, பல ஊர்களில் இருந்தும் மக்கள் நேற்று (04.01.2019) மதுரை வந்தனர்.   
 

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை- பரளச்சி கிராமம் வழியாகவும் மதுரையிலுள்ள கட்டபொம்மன் சிலைக்கு மரியாதை செய்வதற்காக வாகனங்களில் கோஷமிட்டபடி மதுரை சென்றனர். அப்போது, பரளச்சி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஏதோ ஒருவிதத்தில் எரிச்சல் அடைந்துள்ளனர். வாகனங்களில் சென்றவர்கள் மதுரையிலிருந்து திரும்பியபோது, பரளச்சி காவல் நிலையம் அருகே சிலர் கல் வீசினர். கல்வீச்சு தாக்குதலுக்கு உள்ளானவர்கள், அருகிலுள்ள தங்களின் கிராமத்துக்குச் சென்று ஆட்களைத் திரட்டிக்கொண்டு வந்தனர்.

virudhunagar district aruppukkottai incident police


ஏற்கனவே முன்பகை இருந்ததாகச் சொல்லப்பட்டு வரும் நிலையில், இரு தரப்பினரும் அங்கே மோதிக்கொண்டனர். பரளச்சி காவல் நிலையத்துக்கு அருகிலேயே மோதல் தொடர்ந்ததால், அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. வெங்கடேஷுக்கு தகவல் கிடைத்து, சம்பவ இடத்துக்கு உடனே வந்துவிட்டார். பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பில்லாத நிலையில், கோஷ்டியாக மோதிக்கொண்ட கூட்டத்தினரைக் கலைப்பதற்காக, பதற்றமான அந்தச் சூழ்நிலையில், தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கி இரண்டு ரவுண்ட் சுட்டார். இதனால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட கூட்டத்தினர் சிதறி ஓடினார்கள். 

 

இந்த மோதலில் காயமடைந்த 10 பேர், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை சரக டி.ஐ.ஜி.ஆனி விஜயா தலைமையில், அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 
 

சார்ந்த செய்திகள்