
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ஏ.தர்மராஜ் பிரபு. (65). தொழிலதிபரான இவர் நித்யானந்தாவின் பக்தர். தர்மராஜ் பிரபு வேப்பங்குடியில் நிலம் வாங்கும் போது நித்யானந்தா ஆசிரமம் கட்ட நிலம் வாங்கப்படுவதாகவும் பேச்சு அடிபட்டது. ஆனால் திருமண மண்டபம் திறப்பு விழாவுக்கு நித்யானந்தாவை அழைத்த போது அவர் வரவில்லை என்பதால் சில ஆண்டுகளாக தர்மராஜ் நித்யானந்தா ஆசிரமம் போவதில்லை என்ற பேச்சும் உண்டு.
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மாலையில் வேப்பங்குடியில் உள்ள சக்தி அம்மனை தரிசனம் செய்துவிட்டு அருகில் உள்ள தியான மண்டபத்தில் அமைதியாக இருந்துவிட்டு அங்கு வரும் பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லிவிட்டு 6 மணிக்கு பிறகு கிளம்பிச் செல்வது வழக்கமானது. அதேபோல தான் 17ந் தேதியும் தரிசனம் முடிந்த பிறகு தனது காரில் வீட்டுக்கு கிளம்பினார்.
அந்த காரை இருசக்கர வானத்தில் பின்தொடர்ந்தவர்கள், ஒரு இடத்தில் அந்த காரை வழிமறித்து உள்ளே ஏறி அவரை கடத்த முயன்றனர். இதனை பார்த்த சிலர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் புதுக்கோட்டை காவல்நிலையத்தில் தகவல் அளித்தனர். அதன் பிறகு புதுக்கோட்டை போலிசார் பல பிரிவுகளாக பிரிந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அவரது செல்போன் சிக்னல் கண்காணிக்கப்பட்டது. உடைந்த கண்ணாடியுடன் கார் தொர்ந்து செல்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு தஞ்சை, திருவாரூர் மாவட்ட போலிசாருக்கும் தகவல் கொடுக்க அந்த நேரத்திற்குள் முத்துப்பேட்டை தாண்டி உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாயலம் பக்கம் கார் நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது பேசிய அந்த நபர்கள் ரூ. 2 கோடி பணம் வேணும் என்று சொல்ல பணத்தை தர தர்மராஜ் வீட்டினர் ஒத்துக் கொண்டதால் கார் மீண்டும் திருப்பப்பட்டது. பணத்தை கந்தர்வகோட்டையில் காத்திருக்கும் நபரிடம் கொடுக்க வேண்டும் என்று சொல்ல அங்கு மப்டி போலிசார் காத்திருந்தனர்.
தர்மராஜ் கடத்தப்பட்ட கார் முத்துப்பேட்டை கடந்து தம்பிக்கோட்டை வரும் போது செக்போஸ்ட் அமைக்கப்பட்டு சோதனை நடப்பதை அறிந்த கடத்தல்காரர்கள் தாங்கள் கண்காணிக்கப்படுவதை அறிந்து செக்போஸ்டில் தடுப்புகளை உடைத்துக் கொண்டு கார் கிழக்கு கடற்கரைச் சாலையில் பயணித்தது. அதன் பின்னால் புதுக்கோட்டை ஆயுதப்படை போலிஸ் வாகனம் தொடர்ந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி செக்போஸ்டில் ஹை வே பேட்ரோல் வாகனத்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு காத்திருந்தனர்.
அருகில் வந்த கடத்தல் வாகனம் இனியும் தப்பிக்க முடியாது என்று கடத்தல்காரர்கள் 7 பேரும் தப்பி ஓடினார்கள். அப்போது நள்ளிரவு மணி 1.45. தர்மராஜ் மற்றும் கார் ஓட்டுநர் மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு புதுக்கோட்டை அழைத்து வரப்பட்டனர். அதே நேரத்தில் கந்தர்வகோட்டையில் பணத்துக்காக காத்திருந்த ராமச்சந்திரன் என்பவரை போலிசார் மடக்கி பிடிக்க அவனுடன் இருந்த பில்லா பாண்டி என்பவன் தப்பி ஓடிவிட்டான்.
எப்படி தர்மராஜ் குறிவைத்து கடத்தப்பட்டார்? நவீன அரிசி ஆலைக்கு நெல் வாங்க பட்டுக்கோட்டை உள்ளிட்ட தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களுக்கு அடிக்கடி செல்லும் தர்மராஜ் சொத்து அதிகம் உள்ளவர் என்பதை அறிந்து கொண்ட பில்லா பாண்டியின் ஆலோசனையில் சில நாட்கள் உளவு பார்த்த பிறகு இந்த கடத்தல் நடந்திருக்கிறது. கடத்தலில் திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 7 பேர் சம்மந்தப்பட்டுள்ளனர் என்பது முதல் விசாரனையில் தெரியவந்துள்ளது.
தொழிலதிபர் கடத்தப்பட்டு 7 மணி நேரத்திற்குள் எந்த பாதிப்பும் இல்லாமல் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் போலிசாரின் தீவிர முயற்சியால் மீட்கப்பட்டிருப்பது பாராட்டப்பட வேண்டியது.