Skip to main content

இட ஒதுக்கீட்டில் காத்திருப்போர் பட்டியலிலுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்!- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

Published on 19/12/2020 | Edited on 19/12/2020

 

government schools students chennai high court

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்றும் கட்டணம் செலுத்த முடியாததால், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தகுதி மற்றும் தரவரிசை பட்டியல் அடிப்படையில், இரண்டாம் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்படும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாததால், கடலூரைச் சேர்ந்த மாணவிகள் தர்ஷினி, மற்றும் இலக்கியா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என நவம்பர் 20- ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது.

 

இதையடுத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன் தேதியிட்டு அமல்படுத்தக் கோரி, மாணவிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ‘காத்திருப்போர் பட்டியலில் உள்ள 60 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை கிடைக்க ஏதுவாக, கூடுதல் இடம் உருவாக்க முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும்.’ என தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

 

அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழகத்தில் இருந்து வழங்கப்பட்ட இடங்களில் 227 இடங்கள் மீண்டும் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர்,‘அதில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் கிடைக்கும் 26 இடங்களைக் கொண்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள மனுதாரர் உள்ளிட்ட 60 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறு கலந்தாய்வு நடத்தப்படும். மேலும், இந்த 60 மாணவர்களுக்கும் சம வாய்ப்பு, தகுதி மற்றும் தரவரிசை பட்டியல் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் என, தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

 

இதனைப் பதிவு செய்த நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

 

சார்ந்த செய்திகள்