கடத்திச் செல்லப்பட்ட குழந்தை கிடைக்காததால் கடந்த 3 நாட்களாக உணவு நீர் இன்றி குழந்தையின் நினைப்பில் தவித்து வருகின்றனர் நரிக்குறவர் பெற்றோர்.
பவுஞ்சூரில் ( 15 09 18 )சனிக்கிழமை இரவு தனது பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை காணாமல் போனது. அக்குழந்தையை அணைக்கட்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த மானாமதி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் நரிக் குறவர் இனத்தைச் சேர்ந்தவர். அவர் தன் மனைவி காளியம்மா மற்றும் இரண்டு வயது மகள் ஹரிணி ஆகியோருடன் கிழக்கு கடற்கரைச் சாலை இடைக்கழிநாடு பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு சென்றார்.
அங்கு சீப்பு, மணி, கண்ணாடி உள்ளிட்ட பொருள்களை விற்கும் நோக்கில் சனிக்கிழமை காலை ஆட்டோ மூலம் சென்றார். அன்று இரவு சொந்த ஊர் திரும்புவதற்காக செய்யூர் வழியாக பவுஞ்சூர் வந்தனர். இரவு நேரமானதால் அங்கு தமது குடும்பத்தினருடன் தங்கினார்.
நள்ளிரவு கண்விழித்த வெங்கடேசன் அருகில் தூங்கிக் கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை ஹரிணி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரும், மனைவி காளியம்மாவும் பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.
இதுபற்றி அணைக்கட்டு காவல்நிலையத்தில் குழந்தையின் தாயார் காளியம்மா புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குழந்தை கடத்தப்பட்ட நாளிலிருந்து வெங்கடேசனின் உறவினர்கள் பல குழுக்களாக பிரிந்து காணாமல் போன குழந்தையை தேடி வருகின்றனர்.
அதே சமயத்தில் குழந்தையின் தாயார் காளியம்மா குழந்தை கடத்தப்பட்ட அந்த நொடியில் இருந்து தற்போது வரை உணவு மற்றும் நீர் அருந்தாமல் குழந்தையின் நினைவில் வாடி வருகிறார். அவர் உடல்நிலை மோசமடைந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறையிடம் கேட்கும்பொழுது குழந்தையை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.