Skip to main content

'தி கேரளா ஸ்டோரி' வலுக்கும் எதிர்ப்புகள்; களத்தில் முதல் போராட்டம்

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

 

'தி கேரள ஸ்டோரி' திரைப்படம் சமகால நிகழ்வுகளுக்கு மாறான செய்திகளை வெளிப்படுத்துவதாக அப்படத்திற்கு கடும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் திரைப்படத்தை திரையிடக்கூடாது என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். தமிழகத்தில் இப்படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது என மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சுவாமிநாதனிடம் கடந்த மே 3 அன்று நேரில் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.

 

அதேசமயத்தில் இப்படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது. அப்படத்தினை எதிர்க்கும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பினைத் தொடர்ந்து மஜக ஜனநாயக வழியில் போராட சகல தரப்புக்கும் அழைப்பு விடுத்தது. இதனைத் தொடர்ந்து 'தி கேரள ஸ்டோரி' திரைப்படத்திற்கு எதிரான முதல் கள எதிர்ப்பை மஜக பதிவு செய்துள்ளது.

 

திருவாரூர் மாவட்டம் கட்டிமேட்டில், தமிழக அரசு இத்திரைப்படத்தை ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி காலை 11 மணிக்கு மஜக சார்பில் திடீர் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட இரண்டரை மணி நேரத்தில் நடைபெற்ற இப்போராட்டக் களத்தில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று முழக்கங்களை எழுப்பினார். அவர் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது, இக்களத்தில் சமூகநீதி அமைப்புகள்  மற்றும் ஃபாஸிஸ எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் கட்சிகள் இணைவார்கள் என்றும் இது ஜனநாயக வழியில் முன்னெடுக்கப்படும் போராட்டம் என்றும் கூறினார். இதில் மஜகவினரோடு ஜமாத் நிர்வாகிகள், தமுமுக, SDPI நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்வுக்கு மஜக மாவட்ட துணைச் செயலாளர் கட்டிமேடு ரஹ்மத்துல்லா தலைமை ஏற்று வழி நடத்தினார். இதில் திருத்துறைப்பூண்டி மஜக ஒன்றிய செயலாளர் நிஜாம் மைதீன், மாவட்ட IT செயலாளர் கட்டிமேடு ஆசிப், கத்தார் மண்டல நிர்வாகி ராவுத்தர், கிளை செயலாளர் அசாரூதீன், பைசல் அஹமது, முகமது பைசல், சாகுல்ஹமீது, மாலிக், ஷேக் முகமது, ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்