கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கொச்சி - களமசேரி பகுதியில் ஜெகோபா வழிபாட்டுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது அங்கு பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்துள்ளது. இதனைக் கண்டு பிரார்த்தனை செய்தவர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். குண்டு வெடித்த இடத்தில் தீப்பற்றி எரிந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும், குழந்தைகள் உட்பட 35 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக களமசேரி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் குண்டுவெடிப்பு குறித்து மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனைகளுக்குப் பிறகே வாகனங்கள் தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை வாளையார், அதனை எடுத்துள்ள காக்காசாவடி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் 13 இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவையில் தேவாலயங்கள், கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களிலும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை அம்பத்தூர், ஆவடி ரயில் நிலையங்களிலும் ரயில்வே இருப்புப் பாதை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்புப் பணிகளில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.