
கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு பகுதியில் 5 வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கடைவீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டது. கடைகளும் திறக்கப்படவில்லை. குடிதண்ணீருக்காக பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், நகரம் சன்னதி, வடகாடு, மாங்காடு, கைகாட்டி, கொத்தமங்கலம், பனங்குளம், பெரியார் இணைப்புச்சாலை, மற்றும் பல கிராமங்களுக்கு மீட்புக்குழுவினர் வரவில்லை என்றும் குறைவான பாதிப்பு உள்ளதாக தகவல் வெளியானதையடுத்தும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதனால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அடுத்தடுத்த நாட்களில் போராட்டம் கைவிடப்பட்ட நிலையிலும் 5 வது நாளாக கீரமங்கலம் வழியாக பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, பேராவூரணி, ஆலங்குடி மேற்பனைக்காடு ஆகிய ஊர்களுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கவில்லை. அதே போல கொத்தமங்கலத்தில் இருந்து புதுக்கோட்டை, கீரமங்கலம், அறந்தாங்கி பகுதிக்கும் வடகாட்டில் இருந்து ஆலங்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிக்கும் பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். வெளியூர் செல்ல வேண்டிய பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் அறந்தாங்கி போன்ற பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து பஸ்சில் பயணம் செய்கின்றனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் கடைகள் திறக்கப்படாமல் கடைவீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

புயல் பாதிக்கப்பட்ட அனைத்துக் கிராமங்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் உடைந்து பழுதடைந்துள்ளதால் மின்சாரம் தடைபட்டு குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்தந்த கிராம இளைஞர்கள் தங்கள் சொந்த செலவில் ஜெனரேட்டர் வசதி செய்து குடிதண்ணீர் பிரச்சனையை ஓரளவு தீர்த்துள்ளனர். தற்போது ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் பல ஊர்களில் குடிதண்ணீர் வசதி செய்து கொடுத்துள்ளனர். இந்த நிலையில் பல கிராமங்களுக்கு டேங்கர் மூலம் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. காசிம்புதுப்பேட்டை கிராமத்திற்கு குடிதண்ணீர் கிடைக்காததால் அந்த ஊர் இளைஞர்கள் டேங்கர் உதவியுடன் நகரம் கிராமத்தில் வந்து குடிதண்ணீர் எடுத்துச் சென்றனர். அதே போல கொத்தமங்கலம் பகுதியில் குடிதண்ணீர் டேங்கர் லாரிகள் எப்ப வரும் என்று சாலை ஓரங்களில் காலிக்குடங்களுடன் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.