கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ளது கொத்தவாசல். இந்த ஊரைச் சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன். (50 வயது). இவரது ஊருக்கு அருகிலுள்ள செட்டி கட்டளை கிராமத்தில் நடைபெறும் ஒரு திருமணத்திற்கான வாழ்த்து சுவரொட்டியில் நாகராஜன் புகைப்படம் அச்சிடப்பட்டு அந்த சுவரொட்டி கொத்தவாசல் பகுதியில் ஒட்டப்பட்டிருந்தது.
இதைப்பார்த்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பிரகாஷ் என்பவரது அண்ணன் பிரபாகரன் நேற்று முன்தினம் அந்த சுவரொட்டியை கிழித்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கும் நாகராஜன் தரப்பிற்கும் தேர்தல் முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக தெரியவருகிறது. சுவரொட்டி கிழித்ததைப் பற்றி கேள்விப்பட்ட நாகராஜனின் அண்ணன் ராஜேந்திரன், நாகராஜனின் மகன் முத்தமிழ்ச் செல்வன் ஆகியோர் போஸ்டரை கிழித்ததாக கூறப்படும் பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் பிரபாகரனிடம் சென்று சுவரொட்டி ஏன் கிழித்தீர்கள் என்று கேட்டுள்ளனர்.
அப்போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே மோதலாக உருவெடுத்தது. இதில் ஒருவரை ஒருவர் உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் தாக்கி கொண்டனர். இந்த மோதலில் ராஜேந்திரன், பிரகாஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை மீட்டு அக்கம்பக்கத்தினர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிரகாசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் புத்தூர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.