ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த, வென்றெடுக்க உருவான நாள் மார்ச் 8. சமூகத்தில், அரசியலில், வேலைவாய்ப்பில், பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
உலகத்தில் அனைத்து பகுதிகளிலும் இருந்ததுப்போல் 18ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என பிற்போக்குவாதிகள் இந்தியாவை போல உலகத்தின் அனைத்து நாடுகளிலும் இருந்தனர். வீட்டு வேலைகளை மட்டும் செய், அந்த வேலையை நீ மட்டும் தான் செய்ய வேண்டுமென பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தனர் ஆண்கள். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது. இதனை மத ரீதியாக பாவம் என பரப்பிவைத்திருந்தனர். அனைத்து மதத்திலும் கடவுள் என்கிற சொல் மனிதனை பயம் கொள்ள வைத்தது. இதனால் பெண்களும் முடங்கியே கிடந்தனர்.
சில பெண்ணிய பகுத்தறிவாதிகள், ஆணாதிக்க சமுதாயத்தை நோக்கி கேள்வி எழுப்பினர். இதன் வெளிப்பாடு 1850 களில், நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பெண்களுக்கு பணி வாய்ப்பு தரப்பட்டது. பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது. வேலை கிடைத்தது, ஆண்களுக்கு நிகராக பணியாற்ற முடியும் என பெண் தொழிலாளர்கள் நிரூபித்தனர். ஆனால், ஊதியத்தில் பெண்களுக்கும் - ஆண்களுக்கும் பெரும் வித்தியாசமிருந்தது. இது பெண்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதி என குரல் எழுப்பினர் பெண்ணியவாதீகளும், பெண்ணீய அமைப்புகளும். ஆண்களுக்கு இணையாக ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி வேலை செய்த பெண்கள் உரிமை குரல் எழுப்ப தொடங்கினர்.
அப்போதைய அமெரிக்க அரசு இதற்கு செவி கொடுக்கவில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் ஈடுப்பட முடிவு செய்தனர். அதற்கான நாளாக 1857ம் மார்ச் 8ம் தேதி என முடிவு செய்து அந்த நாளில் அமெரிக்காவில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தை அரசின் ஆதரவுடன் முதலாளிகள் வர்க்கம் ஒடுக்கியது. போராட்டத்தை ஒடுக்கலாம், பெண்களின் மனதில் உள்ள தீயை அணைக்க முடியவில்லை.
1907ம் ஆண்டு சம உரிமை, சம ஊதியம் கேட்டு மீண்டும் பெண்கள் போராடத் தொடங்கினர், இந்த முறையும் போராட்டம் வெற்றி பெறவில்லை, கேட்டால் கிடைக்காது, கேட்டுக்கொண்டு இருந்தால் மட்டும்மே கிடைக்கும் என்பதை உணர்ந்த பெண் தொழிலாள அமைப்புகள், தொடர்ச்சியாக அரசாங்கத்தை நோக்கியும், முதலாளிகள் வர்க்கத்தை நோக்கி கோரிக்கை குரல் எழுப்பியும், அதனை நிறைவேற்ற வேண்டும் என போராடியபடியே இருந்தனர்.
1910ம் ஆண்டு டென்மார்க் நாட்டில், பெண்கள் உரிமை மாநாடு நடந்தது. இதில் உலகின் பல நாடுகளை சேர்ந்த உழைக்கும் பெண்களின் அமைப்புகள் கலந்து கொள்ள வேண்டும், நமது ஒற்றுமையை உலகிற்கு காட்ட வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, இலங்கை, ஜப்பான் போன்ற பல நாடுகளில் இருந்து பெண் பிரிதிநிதிகள் இந்த மாநாட்டுக்கு சென்றனர். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை.
1920ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் பெண் புரட்சியாளர் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, உலகத்தில் முதன்முதலாக பெண்களின் உரிமைக்காக போராட்டம் நடந்தது மார்ச் 8ந்தேதி. அந்த தேதியே பெண்களின் போராட்டத்துக்கான தொடக்கம். அதன் நினைவாக அந்த தேதியை இனி வருடந்தோறும் உலக மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று அறிவிப்பு செய்தார். அந்த அறிவிப்பை பல நாடுகளின் பெண் அமைப்புகள் ஏற்றுக்கொண்டன. இதையடுத்து 1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
பெண்கள் அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வந்த மகளிர் தினத்தை 50 ஆண்டுகளுக்கு பின் 1975ம் ஆண்டு, மார்ச் 8ந்தேதியை சர்வதேச மகளிர் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இதனை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டு கடைப்பிடித்து வருகின்றன. இந்த தினம் என ஒன்று உருவானபின்பு தான், உலகின் பல நாடுகளில் பெண்களுக்கான உரிமைகள் கிடைக்க துவங்கின என்பது நிகழ்கால வரலாறு.
ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் ரஷ்யா, உக்ரைன், உஸ்பெஸ்கிஸ்தான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஆர்மேனியா, அஜர்பைஜான், பெலாரஸ், புர்கினியா பெசோ, கம்போடியா, கியூபா, எரித்திரியா, கஜகஸ்தான், மால்டோவா, மங்கோலியா, மான்டேநெக்ரோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.
மகளிர் தினம் தமிழகத்தில் பெரும் எழுச்சியோடு கொண்டாடப்படுகிறது என்றால் அதற்கு காரணம் தந்தை பெரியார்.
பெண் உரிமையே ஒரு சமூகத்தின் விடுதலை என்றவர் தந்தை பெரியார். பெண் விடுதலைக்காக, அவர்களின் உரிமைக்காக இந்தியாவில் அதிகளவில் குரல் கொடுத்தவர் பெரியார் என்றால் மிகையில்லை. அவரின் போராட்டம்மே தமிழகத்தில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம், விதவை பெண்களுக்கு மறுவாழ்வு, பெண் குழந்தைகளுக்கு கல்வி, தாலி கட்டும் அடிமை முறை, குடும்ப சொத்தில் பெண்களுக்கு சமபங்கு போன்றவற்றை வலியுறுத்தியவர் தமிழர்களின் தந்தையாக பார்க்கப்படும் பெரியார். தன் வாழ்நாள் முழுவதும் பெண்களுக்கு ஆதரவாக எழுதியும், பேசியும், செயல்பட்டும் வந்தார்.
பெரியாரின் பெண்ணிய கருத்துக்களை, உரிமைகளை அதற்கடுத்து ஆட்சிக்கு வந்த திராவிட தளபதிகளான பேரறிஞர்அண்ணா, கலைஞர் போன்றவர்கள் சட்டமாக்கி பெரியாரின் கனவை நிறைவேற்றினார்கள்.
தமிழகத்தை பார்த்து தான் இந்தியாவின் பிறமாநிலங்கள் பெண்களுக்கு ஆதரவாக சட்டங்களை இயற்றின, உரிமைகளை வழங்கின. தற்போதும், இந்தியாவின் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் பெண்களுக்கான உரிமைகள் அதிகம் பெற முடிகிறது என்றால் அதற்கு காரணம் பெரியாரும் அவரது திராவிட தளபதிகளும் தான். பெண்கள் இந்த நாளில் அந்த கிழவனை நினைத்து பெருமிதம் கொள்ள வேண்டும்.