உரிய அனுமதியில்லாமலும், சுகாதாரமற்ற முறையிலும் நச்சுக்கிருமிகளை உருவாக்கி நோய்களை பரப்பக் கூடிய கேரளத்துக் குப்பைக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டி எரித்து அழிக்க முற்பட்டவருக்கும், அதற்கு இடமளித்த பா.ஜ.க.பிரமுகருக்கும் ரூ.80 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர் நெல்லை மாவட்டம் கடைய நல்லூர் தாலுகாவினை சேர்ந்த அரசு அதிகாரிகள்.
மருந்துக்கழிவுகள், தலைமுடி, பழைய செருப்பு, உணவுக்கழிவுகள், பிளாஸ்ட்டிக் கேன்கள், பிளாஸ்ட்டிக் பாட்டில்கள், டப்பாக்கள், தட்டுகள், காலாவதியான ஜாம், சீஸ் பாக்கெட்டுகள் மற்றும் பெருவாரியான பிளாஸ்டிக் ராட்சச கவர்கள் போன்ற கேரளத்து குப்பைகளை லாரிகளில் கொண்டு வந்து தமிழக எல்லைப் பகுதிகளில் கொட்டி செல்வது கேரளவாசிகளின் வழமையான பழக்கம். இவ்வேளையில், மக்கள் மத்தியில் பிளாஸ்டிக் பற்றியும், மருத்துவக்கழிவுகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்பட்ட நிலையில் கேரள குப்பை லாரிகளுக்கு செக் வைத்தது மாவட்ட நிர்வாகம். ஆனால், " கேரள குப்பைகளை நாங்கள் எரிக்கின்றோம்.! அதற்கான கூலியினைக் கொடுங்கள் என ஒப்பந்தம் போட்டு யாருக்கும் தெரியாத வண்ணம் கழிவுகளைக் குழிதோண்டி எரித்து விடுகின்றனர் இங்குள்ள அரசியல் பிரமுகர்கள். அந்த வகையில், கடையநல்லூர் தாலுகாவிற்குட்பட்ட விந்தன் கோட்டை கிராமம் அருகே, சுந்தரபாண்டியம் பகுதியின் முன்னாள் கவுன்சிலரும், பா.ஜ.க. பிரமுகருமான பொன்னா என்கிற பொன்னுச்சாமிக்கு சொந்தமான இடத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து வந்திருக்கின்றார் பாட்டாக்குறிச்சியில் பிளாஸ்டிக் கம்பனி நடத்திவரும் சவுந்தர் ஷா.
இந்நிலையில், நேற்று முன்தினம் குப்பைக்கழிவுகளை அங்கிருக்கும் குழியில் போட்டு எரிக்க முற்பட்டிருக்கின்றனர் இருவரும். அவ்வூரை சேர்ந்த இளைஞர்களோ, " மருத்துவக்கழிவு உள்ளிட்ட கேரள குப்பைக்கழிவுகளை கொண்டு வந்ததே தவறு. இதில் எவ்வித முன்னேற்பாடு, சுகாதரமுமின்றி எப்படி எரிப்ப்பீர்கள்..? இது தவறானது. இதை எரிக்கும் பட்சத்தில் சுவாசகோளாறு, ஆஸ்த்துமா, மூச்சுத்திணறல், ஆகியநோய்கள் உடனடியாக ஏற்ப்படும் என்றும் அதனால் குப்பைகளை எரிக்க அனுமதிக்க முடியாது." எனப் போராடியதோடு மட்டுமில்லாமல் இச்சம்பவத்தை மாவட்ட ஆட்சியருக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாம்பவார் வடகரைப் போலீஸார், " இங்கு எரிக்கக் கூடாது.!" என கடுமையாக எச்சரித்து தீயை அணைத்தனர், உரிய விசாரணைக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமையன்று கடையநல்லூர் தாசில்தார் ஜெயச்சந்திரனின் உத்தரவுப்படி சுகாதார ஆய்வாளர் மாரியப்பன் இருவருக்குமாக சேர்த்து ரூ.80 ஆயிரத்தை அபராத விதித்தார். இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.