தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு போலீசாரை மட்டும் குற்றம் கூறுவது ஏற்புடையதல்ல. மக்களுக்கு பாதுகாப்பு தருவதும் அவர்கள்தான் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச்சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சில போராட்டங்கள் தூண்டிவிடப்படுகின்றன. போராட்ட பூமியாக இருந்தால் தொழிற்துறை, வேலைவாய்ப்பு பாதிக்கப்படும். எந்த பிரச்னையாக இருந்தாலும் நீதிமன்றத்தை அணுக வேண்டும். எதற்கெடுத்தாலும் போராடக் கூடாது. போராட்டம் செய்யும்போது மக்களும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். எந்த அரசு வந்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது.
ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை திறக்க வேண்டும் என நீதிமன்றத்தை அணுகினால் அவர்கள் மனிதர்களே கிடையாது. எல்லாவற்றிற்கும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்துவது எதற்கும் தீர்வாகாது. ஒருநபர் விசாரணை ஆணையம் மீது நம்பிக்கையில்லை.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு போலீசாரை மட்டும் குற்றம் கூறுவது ஏற்புடையதல்ல. மக்களுக்கு பாதுகாப்பு தருவதும் அவர்கள்தான் என தெரிவித்தார்.