அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாகச் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவருக்குச் சொந்தமான, கரூரில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். மதுரை புறவழிச் சாலையில் இருக்கக்கூடிய அம்பாள் நகர் பகுதியில் சங்கருடைய அடுக்குமாடிக் குடியிருப்பும், செங்குந்தபுரத்தில் நிதி நிறுவனமும் உள்ளது. காலையிலிருந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாகக் காத்திருந்தும் கதவுகள் திறக்கப்படாததால் பூட்டை திறக்கும் நபர்களைக் கொண்டு வந்து திறக்கப்பட்டது. தொடர்ந்து உள்ளே ஆறு மணி நேரத்திற்கு மேல் சோதனை நடைபெற்றது. இந்த சோதனைக்குப் பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு பேர், ஆவணங்கள் கொண்ட இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு காரில் சென்றனர். அதனைத் தொடர்ந்து செங்குந்தபுரத்தில் இருக்கக்கூடிய நிதி நிறுவனத்திலிருந்து நான்குக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆவணம் நிறைந்த பைகளை எடுத்துக்கொண்டு சென்றனர். அவர்களுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படை வீரர்களும் பாதுகாப்பிற்காகச் சென்றனர்.