'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்ற பாரதியாரின் வரிகள், தொடர்ந்து இந்த சமூகத்தில் நடைபெறும் சாதி ரீதியான ஆணவப் படுகொலைகள் மூலம் பொய்யாகிக் கொண்டே இருக்கிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக கரூரில் ஒரு ஆணவக் கொலை அரங்கேறியுள்ளது.
கரூர் மாவட்டம் காமராஜர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் ஹரிஹரன் (வயது 23). ஹரிஹரன் இதே பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவர் கடை வைத்திருக்கும் நேர் எதிர் தெருப் பகுதியில் வசித்து வருபவர் வேலன். இவர் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.
அவர், தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு ஆங்கில பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தெருவில் எதிர் கடை என்பதால் ஹரிஹரனுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டிலும் தெரிய வர பிரச்சனை ஆகியுள்ளது.
இந்த விரோதம் கொலை செய்யும் அளவிற்கு வளர்ந்து ஹரிஹரனை நேற்று முன்தினம் (07/01/2021) மதியம் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு அந்த பெண் மூலம் பேசி வரவழைத்த பெண்ணின் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினர் 10- க்கும் மேற்பட்டோர், ஹரிஹரனைக் கல்லால் அடித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஹரிஹரன் உயிருக்குப் போராடிய நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், ஹரிஹரன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காதலித்த இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்தப் படுகொலை திட்டமிட்டு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொலை தொடர்பாகத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணை அடிப்படையில் பெண்ணின் சித்தப்பா சங்கர் (50), தாய்மாமன்கள் கார்த்திகேயன் (40), வெள்ளைச்சாமி (38) உள்ளிட்ட மூவரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பெண்ணின் தந்தை வேலன், மற்றொரு சித்தப்பா முத்து உள்ளிட்டவர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
"இந்த ஆணவக் கொலையை, ஹரிஹரனின் நன்நடத்தை சரியில்லை என்று சாதாரணமாக முடிக்கப் பார்க்கிறார்கள்" என்று ஹரிஹரனின் தரப்பில் ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.