![Karur District collector office](http://image.nakkheeran.in/cdn/farfuture/O53Vq4bm-vkMNgOvVn-e3INsZlTj-chu3b7k-CUve4c/1661841638/sites/default/files/inline-images/th_3126.jpg)
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள சிவாயம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான 10 சென்ட் பூர்வீக இடம் தேசிய மங்கலம் பகுதியில் உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு அந்த 10 சென்ட் நிலத்தை அந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் வேறு நான்கு நபர்களுக்கு பட்டா போட்டு அளித்து விட்டதாகவும், அதை மீட்க 8 ஆண்டுகளாக குளித்தலை வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் வி.ஏ.ஓ. மீது நடவடிக்கை எடுத்து தனக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என மனு அளித்து வந்துள்ளார்.
இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று(29ம் தேதி) மாவட்ட ஆட்சியர் அலுவலக வந்த ராஜசேகர் கையோடு கொண்டு வந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக்கொண்டார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பெட்ரோல் நிரம்பிய பாட்டிலை தட்டி விட்டு அவரை மீட்டனர். தீயணைப்பு வீரர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.