Skip to main content

மணல் கொள்ளையை மூடி மறைக்க சதி? தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

Published on 13/06/2018 | Edited on 13/06/2018

ஆற்று மணல் வருவாயை மறைப்பது ஏன்? மணல் கொள்ளையை மூடி மறைக்க சதியா? என்று பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 
 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

குற்றங்களைத் தடுக்கும்படி கோரிக்கை வைத்தால் ஆதாரங்களை அழிப்பது தான் பினாமி அரசின் வாடிக்கையாக உள்ளது. ஆற்று மணல் கொள்ளையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத பினாமி அரசு, ஆற்று மணல் கொள்ளையை அம்பலப்படுத்த  உதவும் புள்ளி விவரங்களை மறைத்திருக்கிறது. மாநில அரசின் இந்த கள்ளத்தனம் கண்டிக்கத்தக்கது.
 

தமிழகத்தின் முக்கிய ஆறுகளில் குவாரிகள் அமைத்து மணல் விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் நீர்ப்பாசனத் துறையின் திட்டச் சாதனைகள் குறித்த ஆவணத்தில் இடம் பெறுவது வழக்கம். ஆனால், சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆவணத்தில்  தமிழகத்தில் இப்போது எத்தனை மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன? அவற்றின் மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு? என்பது குறித்த விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இது அறியாமல் நடந்த தவறு அல்ல. மாறாக பினாமி ஆட்சியாளர்கள் திட்டமிட்டு அரங்கேற்றிய சதியாகும். 

தமிழக ஆறுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் எடுக்கப்பட்டு விற்கப்படும் மணலின் சந்தை மதிப்பு  ரூ.55,000 கோடி ஆகும். ஆனால், இதன்மூலம் அரசுக்கு கிடைப்பதாகக் கூறப்படும் வருமானம் மிகவும் சொற்பமாகும். அதுவும் கூட நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. உதாரணமாக, 2011-12ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தபோது மணல் மூலம் கிடைத்த வருவாய் ரூ.188.03 கோடியாகும். 2012-13ஆம் ஆண்டில் இது ரூ.188 கோடியாக குறைந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் முறையே ரூ.133.37 கோடி, ரூ.126.02 கோடி, ரூ.91.02 கோடி என்ற அளவில் சரிந்து 2016-17ஆம் ஆண்டில் ரூ.86.33 கோடியாக குறைந்துள்ளது. இதற்குக் காரணம் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் நடக்கும் மணல் கொள்ளை தான்.
 

2016-17 ஆம் ஆண்டில் சந்தையில் ரூ.55,000 கோடிக்கும் மணல் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.  தமிழகத்திலுள்ள சில மணல் குவாரிகளில் மணல் அள்ளும் பணியை ஒப்பந்த அடிப்படையில் செய்த சேகர் ரெட்டி குழுமத்திற்கு அந்த ஆண்டில் ரூ.493 கோடி வருமானம் கிடைத்திருக்கிறது. ஆனால்,  தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை இயக்கி வரும் பொதுப்பணித்துறைக்கு 2016-17ஆம் ஆண்டில்  கிடைத்த வருமானம் ரூ.86.33 கோடி தான் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு தெரிவித்தது. ஆண்டுக்கு  ரூ.55,000 கோடிக்கு மணல் விற்பனை நடைபெறும் நிலையில் அரசுக்கு ரூ.86 கோடி மட்டும் வருமானம் கிடைப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்? அப்படியானால் மணல் விற்பனை மூலம் கிடைக்கும்  வருமானத்தில் மீதமுள்ள தொகை யாருக்கு செல்கிறது? என்பது குறித்து பா.ம.க. ஆதாரங்களுடன் வினா எழுப்பியது. ஆளுனரிடமும் இது குறித்து புகார் அளித்தது. அதேபோன்ற நெருக்கடி இந்த ஆண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இந்த புள்ளிவிவரங்களை அரசு மறைத்திருக்கிறது.



 

Why to cover the river sand? Do you have to cover the sand fleece?



 

தமிழகத்திலுள்ள மணல் குவாரிகளில் 2016-ஆம் ஆண்டு வரை மணல் விற்பனை தனியார் மூலம்  மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஆண்டு முதல் மணல் விற்பனை பொதுப்பணித்துறை மூலம் நேரடியாக செய்யப்படுகிறது. இதனால், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், ஆட்சியாளர்களின் ஆதரவுடன் நடந்த மணல் கொள்ளையால் அரசுக்கு கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக கிடைத்த வருமானம் அதற்கு முந்தைய ஆண்டை விட குறைவாக இருக்கும்  என்பதால் தான் அதை வெளியில் சொல்லாமல் தமிழக அரசு மறைத்திருக்கிறது. இதன் மூலம் ஆற்று மணல் கொள்ளை அதிகரித்துள்ள நிலையில், அதன்மூலம் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானம்  மிகவும் குறைந்திருக்கிறது என்று தான் கருத வேண்டும். இது தமிழகத்திற்கு இரட்டை இழப்பு ஆகும்.

 

தமிழகத்திலுள்ள ஆறுகளில் கட்டுப்பாடு இல்லாமல் மணல் கொள்ளை அடிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. தமிழக அரசு தெரிவித்தவாறு  48 மணல் குவாரிகள் மூலம் ஆண்டுக்கு ரூ.86.33 கோடி மட்டுமே வருவாய் கிடைப்பதாக வைத்துக் கொண்டால், ஒவ்வொரு குவாரியிலும் ஒரு நாளைக்கு சராசரியாக 61 சரக்குந்து மணல் மட்டுமே அள்ளப்படுவதாகவும், 48 குவாரிகளிலும் சேர்த்து 2928 சரக்குந்து மணல் மட்டுமே அள்ளப்படுவதாகவும் தான் பொருள் ஆகும். மணல் எடுப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மோசமான பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது, இந்த வருவாய் மிகவும் குறைவாகும்.

 

 நடப்பாண்டிற்கான நீர்ப்பாசனத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ள  இன்னொரு புள்ளிவிவரப்படி, முதற்கட்டமாக மாதம் 5 லட்சம் டன் வீதம் 30 லட்சம் டன் ஆற்று மணல் இறக்குமதி செய்யப்படவுள்ளது. இத்துடன் ஒப்பிடும்போது, அரசு குவாரிகளில் இருந்து எடுக்கப்படுவதாக அரசால் கணக்கு காட்டப்படும் மணல் அளவு ஒரு பொருட்டே அல்ல. இறக்குமதி மணலில் அளவை சற்று அதிகரித்தாலே தமிழகத்தின் மணல் தேவையை சமாளித்து விட முடியும். இதன்மூலம் தமிழகத்திலுள்ள ஆற்று மணல் குவாரிகள் அனைத்தையும் மூடி இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும். 

 

எனவே, மணல் இறக்குமதியையும், செயற்கை மணல் உற்பத்தியையும் அதிகரிப்பதன் மூலம் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தையும் மூட வேண்டும். அதுமட்டுமின்றி, மணல் கொள்ளை மற்றும்  விற்பனையில் நடந்த ஊழல் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.