கடந்த 23-ந்தேதி அதிகாலை சாலிகிராமத்தில் உள்ள முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் எம்.எல்.ஏவுமான கருணாஸின் வீட்டுக் கதவைத் தட்டியது காவல்துறை. முதலமைச்சரையும், காவல்துறை அதிகாரியையும் மிரட்டும் தொனியில் பேசியதாக கைது செய்வதாக அறிவித்தார் நுங்கம்பாக்கம் ஏ.சி.முத்துவேல்பாண்டியன்.
“சிறைக்கு அஞ்சாத சீவலப்பேரி பாண்டி வம்சத்தை சேர்ந்தவன் நான், வாங்க போகலாம்னு” வான்டட்டாக வந்து வண்டியில் ஏறினார் கருணாஸ். அதே கருணாஸ்தான் இன்று கைதுக்குப் பயந்து நெஞ்சுவலி என்று கூறி, மருத்துவமனையில் படுத்துக் கொண்டிருக்கிறார்.
முதலமைச்சரை மிரட்டிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட மறுநாளே, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது ரசிகர்களிடம் தகராறு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கருணாஸ் கைது செய்யப்பட்டிருப்பதாக திருவல்லிக்கேணி போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த 2 வழக்குகளிலும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கருணாசுக்கு, எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதற்குப் பிறகாவது சும்மா இருப்பார் கருணாஸ் என்று நினைத்தது எடப்பாடி அரசு. ஆனால், கூவத்தூர் ரகசியங்களை வெளியிடுவேன் என்று ஊடகங்களில் பேசி அனலைக் கிளப்பினார். பற்றாக்குறைக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் கருணாஸ் வீட்டிற்கே சென்று ஆதரவு தெரிவித்தனர்.
இதனால் கொதித்த ஆளுந்தரப்பு, போன வருஷம் நெற்கட்டும்செவலில் தகராறு செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் (398/2017 – IPC 147(3)) கருணாஸைக் கைது செய்ய தீவிரம் காட்டி வருகிறது.
சுப்பையா பாண்டியன் என்பவர் அளித்த புகாரின் பேரில், ஓராண்டிற்குப் பிறகு கைது செய்ய புளியங்குடி போலீஸார் சென்னை வந்ததால், நெஞ்சுவலி என்று கூறி மருத்துவமனையில் படுத்துக் கொண்டார் கருணாஸ்.
மேலும், சபாநாயகர் தனபால் மூலம் நோட்டீஸ் அனுப்பி, அவரது எம்.எல்.ஏ பதவியைப் பறிக்கவும் ஆளுந்தரப்பு முயற்சி செய்து வருகிறது. இதை அறிந்த கருணாஸோ, சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி, சட்டப்பேரவை செயலாளருக்கு மனு அனுப்பி அதிரடி காட்டி உள்ளார்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதத்திற்கு வர குறைந்தபட்சம் 35 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. எனவே, திமுக உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பார்களோ என்ற அச்சம் எழுந்திருக்கிறது ஆளும் தரப்புக்கு. இதை உறுதிப்படுத்தும் வகையில் கருணாஸை மருத்துவமனைக்கே சென்று ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ பார்த்தது ஆளுந்தரப்பை மிரள வைத்துள்ளது. அதனால்தான், ஜாமின் நிபந்தனையை கருணாஸ் மீறினாலும், கடுமை காட்ட வேண்டாம் என்று காவல் துறையிடம் சொல்லியிருக்கிறது மேலிடம்.
இதற்கிடையே, புளியங்குடி வழக்கில் முன்ஜாமின் கேட்டு கருணாஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, அக்டோபர் 8-ஆம் தேதி வரை கருணாஸைக் கைது செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளது. எனவே, கருணாசுக்கு முன்ஜாமின் கிடைக்குமா? காவல்துறை கைது செய்யுமா? என்பது அக்டோபர் 8-ஆம் தேதிக்குப் பிறகே தெரியும்!