ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் 3 மாதத்திற்குள் தமிழ் இருக்கைக்கான ஆய்வறிக்கை பெயர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை உற்பத்தி திறன் குழு அமைப்பின் 60 ஆம் ஆண்டு பொன்விழா கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், நீட்ஸ் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 5 கோடி ரூபாய் வரை குறைந்த வட்டியில் முதலீட்டு தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் இதற்காக 1000 பயனாளிகள் தேர்வு செய்யப்பட வேண்டிய நிலையில் 750 விண்ணப்பங்கள் மட்டுமே ஆண்டுக்கு பெறப்படுவதாகவும் தெரிவித்தார். பயனாளிகள் கண்டறிவதில் சிரமம் இல்லை என்றாலும் ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படுவதால் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும் அவர் அப்போது தெரிவித்தார். ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் 3 மாதத்திற்குள் தமிழ் இருக்கைக்கான ஆய்வறிக்கை பெயர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என நம்பிக்கை தெரிவித்த அவர் அதற்கான முழு தொகையும் கடந்த மார்ச் மாதமே செலுத்தப்பட்டு விட்டதாகவும் அவர் அப்போது தெரிவித்தார். முதலமைச்சரின் உத்தரவுப்படி மலாய், யாழ்பாணம் உள்ளிட்ட சர்வதேச பல்கலைக்கழகங்களில் ஆய்வறிக்கைகளை துவங்குவது தொடர்பாக தொடர்ந்து அதிகாரிகள் மட்டத்தில் கலந்தாலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.