Skip to main content

சாராய குடும்பத்தை பிடித்து தந்த கிராம மக்கள்!

Published on 12/02/2019 | Edited on 12/02/2019
javadhu malai 01


வேலூர் - திருவண்ணாமலை மாவட்டத்தில் பரந்துவிரிந்துள்ள ஜவ்வாதுமலை தொடரில் கள்ளச்சாராயம் மிக பிரபலம். மலை முழுவதும் வனத்துறை மற்றும் கலால் துறையால் ரெய்டு செய்து தடுக்க முடியாத நிலையால் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாமல் தடுமாறுகிறது இந்த இரண்டு மாவட்ட காவல்துறை. 
 

அதனால், மலை கிராம மக்களிடையே கள்ளச்சாராயம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் போலிஸார். இந்த விழிப்புணர்வு பணியில் சமூக அமைப்புகளும் ஈடுப்பட்டுள்ளன. இதனால் கள்ளச்சாராயம் என்பது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அப்படி கட்டுக்குள் வந்த பகுதிகளிலும் தமிழக ஆளும் அதிமுக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து இது நல்லச்சாராயம் என விற்பனை செய்வது தனிக்கதை. இந்நிலையில் எச்சரிக்கையை மீறி தொடர்ச்சியாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த குடும்பத்தை காவல்துறையிடம் பிடித்து தந்துள்ளார்கள் மலைகிராம மக்கள்.
 

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலை கிராமத்தில் பல வருடங்களாக கள்ளச்சாராயம் விற்று வந்தனர் சரோஜா மற்றும் குழந்தை இருவர். இதுப்பற்றி காவல்துறைக்கு தகவல் தந்தால் வந்து பிடித்து செல்வர், பெயருக்கு வழக்கு பதிவு செய்துவிட்டு வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு எச்சரித்துவிட்டு விடுவார்கள். இதுதான் வாடிக்கையாக இருந்துவந்தது.


 

javadhu malai 01


இந்நிலையில் வெளியூர்களில் இருந்து சாராயம் குடிக்க இந்த கிராமத்துக்கு இளைஞர்கள், ஆண்கள் வருவதால் அக்கிராம மக்கள் கோபத்தில் இருந்தனர். இதற்கு முடிவுக்கட்ட பிப்ரவரி 11ந் தேதி கிராம மக்கள் ஒன்றிணைந்து, சரோஜா வீட்டுக்குள் புகுந்து அங்கு வைத்திருந்த சாராய கேன்கள், லாரி டியூப்களில் அடைத்து வைக்கப்பட்டுயிருந்த சாராயத்தை எடுத்துவந்து வீட்டுக்கு வெளியே வைத்துவிட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மக்கள் பிடித்த சுமார் ஆயிரம் லிட்டருக்கு மேலிருந்த இந்த சாராயத்தின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சத்தை தாண்டும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். 
 

ஆம்பூர் தாலுக்கா போலிஸார் உடனடியாக நாயக்கநேரி கிராமத்துக்கு சென்றனர். மக்கள் பிடித்து தந்த சாராயத்தையும், சாராயம் விற்பவர்களையும் கைது செய்துக்கொண்டு காவல்நிலையம் வந்தனர். அவர்களிடம் இன்னும் எங்காவது சாராயம் பதுக்கி வைத்துள்ளார்களா?, சாராயம் காய்ச்சி தங்களுக்கு விற்பனை செய்வது யார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

 

சார்ந்த செய்திகள்