தமிழகத்தில் கோவை, திருப்பூர், மதுரை, சேலம் என பல மாவட்டங்களில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர் வீடுகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி வரும் சம்பவத்தால் பதட்டமான சூழ்நிலை உருவாகி வருகிறது.
இந்தநிலையில், நேற்று 25ம் தேதி குமரி மாவட்டம், மண்டைக்காடு அருகே கருமன்கூடல் பகுதியில் உள்ள பாஜக பிரமுகர் கல்யாணசுந்தரம் வீட்டில் அதிகாலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் கையில் கொண்டு வந்த இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீட்டின் வெளியே நின்று கொண்டு வீட்டுக்குள் வீசுவது சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது.
அந்த இரண்டு பெட்ரோல் குண்டுகளில் ஒன்று வீட்டுக்குள் நின்ற காரின் முன் பக்கத்திலும், இன்னொன்று வீட்டு ஜன்னலில் விழுந்து ஜன்னல் கண்ணாடியும் உடைந்திருக்கிறது. இது குறித்து கல்யாணசுந்தரம் மண்டைக்காடு போலீசில் புகார் கொடுத்தார். உடனே காவல்துறை உயர் அதிகாரிகள், உளவு பிரிவினர், கியூ மற்றும் ஐ.பி. பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, கல்யாணசுந்தரம் வீட்டுக்கு வந்து விசாரித்தார். கல்யாணசுந்தரம் ஆரம்பத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தோடு தொடர்பில் இருந்தவர். பின்னர் வெளி நாட்டுக்கு சென்று இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டு பிரபல தொழிலதிபரானார். இங்கு திருமண மண்டபம், லாட்ஜ், ஹோட்டல், பார் என பல்வேறு தொழில்கள் நடத்தி வருகிறார். வெளி நாட்டிலும் இரும்பு கம்பெனிகள் உள்ளன.
தற்போது பா.ஜ.க.வின் கட்சி நிகழ்ச்சிகளுக்கும், தேர்தல் நேரத்தில் நிதி உதவிகளையும் செய்து வருகிறார். ஆனால் இவர், பாஜகவில் எந்த பொறுப்பிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் ஏராளமான இந்து கோவில்களுக்கும் நிதி உதவிகளை செய்து இருக்கிறார்.
இந்த நிலையில் அவரின் வீட்டுக்குள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் குண்டு வீசியவா்களை விரைவில் கைது செய்வோம் என்கின்றனா் போலீசார்.