
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 16வது பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் வசிக்கக்கூடிய மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் பழங்குடியின இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்து உரையாற்றிய ஆர்.என்.ரவி, ''தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழி. தமிழ் மொழி பேச முதலில் சிரமம் இருந்தது. ஆனால் இப்பொழுது தமிழ் தெரிந்து கொள்கிறேன்'' என தமிழ் கலாச்சாரம் தொடர்பாக மாணவர்களிடம் உரையாற்றினார். கல்வி உட்பட பல்வேறு துறைகளில் பழங்குடியின இளைஞர்கள் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
அதன் பிறகு மேடையில் பழங்குடியினரின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அப்போது தலைப்பாகை அணிந்து பறவைகளின் இறகுகளை வைத்துக்கொண்டு ஆர்.என்.ரவி பழங்குடியின மக்களுடன் உற்சாகமாக நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மொத்தமாக ஒரு மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.