தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பாக சிலர் தமிழக அரசை விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இது அரசை குறைகூறும் நேரமல்ல என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில், மக்களுக்கு என்ன செய்வது என்பது மட்டுமே உடனடியாக செய்ய வேண்டும் அரசை குறைகூறும் நேரம் இதுவல்ல. ஆனால் அரசை விமர்சிக்க கூடாது என்று கூறவில்லை. பேரிடர்கள் என்பது யாராலும் கணிக்க முடியாது; மக்களுக்கு நீண்ட கால தீர்வை கொடுக்க வேண்டும்; அதற்கான நடவடிக்கை தேவை. நாம் எதிர்பார்த்ததை விட இந்த முறை அதிக மழை பெய்ததால் நமக்கு பாதுகாப்பு குறைவாக தோன்றுகிறது. அரசு இயந்திரம் ஒரு கோடி மக்களை உடனே சென்றடைவது என்பது சாத்தியமில்லை. அதனால் நாம் நமக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும். மக்கள் நீதிமய்யம் சார்பாக மருத்துவ முகாம் இன்று நடத்தப்படுவதாக இருந்தது; ஆனால் இனிமேல்தான் மக்களுக்கு நோய் தொற்று அதிகரிக்கும் என்பதால், நாளை முதல் நடத்தப்படும்” என்றார்.