சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி கட்டிடத்தின் மேல் தளத்தில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இன்று விடுமுறை என்ற நிலையில் எல்ஐசி கட்டிடத்தின் 14 வது மாடியின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இந்த விபத்து குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தீயணைப்புத்துறை இயக்குநர் விஜயசேகர், ''தீயணைப்பு சாதனங்களை எந்த வகையில் பயன்படுத்துகிறார்கள், பராமரிக்கிறார்கள் என்பதை பற்றி ஆய்வு நடத்துகிறோம். அதுமட்டுமல்லாமல் வெளியேறும் வழிகள், அவசரகால வழிகள் என போர்டு வைக்கப்பட்டிருக்கும். அதெல்லாம் சரியாக இருக்கிறதா என சோதனை செய்கிறோம். எந்த பில்டிங்காக இருந்தாலும், உயர்மாடி கட்டிடமாக இருந்தாலும் தீயணைப்புத்துறையினர் பயர் ஆடிட் செய்து கொண்டிருக்கிறோம். வருடத்திற்கு இரண்டு முறை செய்வோம். 6 மாதத்திற்கு முன்பு எல்ஐசி பில்டிங்கில் செய்த தணிக்கையில் இவை எல்லாம் சரியாக இருக்கிறது என மாவட்ட அலுவலர் அறிக்கை கொடுத்திருக்கிறார்'' என்றார்.