தமிழ்நாட்டில் திமுக சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய நாள் ஆகிய மூன்றையும் ஒன்றிணைத்து முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட இந்த விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், குவைத் நாட்டின் மகா புல்லா பகுதியில் திமுக அயலக அணி சார்பில் கடந்த 28ஆம் தேதியன்று முப்பெரும் விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இருந்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா, திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். குவைத் நாட்டிற்கு சென்ற எம்.எம். அப்துல்லாவை வெளிநாடு வாழ் தமிழர் நல அறக்கட்டளை மற்றும் நல சங்கத்தின் நிர்வாகிகள் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். மேலும், வெளிநாடு வாழ் தமிழர்கள் குறித்த பல்வேறு கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தினர்.
அது மட்டுமல்லாது, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்று கோரிக்கை வைத்து வரும் பிரச்சார இயக்கம் பற்றி மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லாவிடம் விளக்கப்பட்டது. மேலும் அந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தன்னுடைய கையெழுத்தைப் பதிவு செய்துள்ளார். “எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது மத்திய அரசின் கவனத்திற்கு இந்தப் பிரச்சனையை நிச்சயமாகக் கொண்டு செல்வேன்” என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி, வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளையின் குவைத் மண்டல தலைவர் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்றது. மேலும், செயலாளர் திருச்சி முபாரக், பொருளாளர் திருமா இருளப்பன், மூத்த நிர்வாகி தேசம் மாடசாமி, இணை ஒருங்கிணைப்பாளர் பீர் முகம்மது, தலைமை ஒருங்கிணைப்பாளர் நெல்லை மரைக்காயர், செயற்குழு உறுப்பினர் அய்யப்பன், ஊடக அணி செயலாளர் பக்ருதீன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.