புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள வேம்பங்குடி கிழக்கு கிராமத்தில் கல்லணை கால்வாயில் கடந்த வாரம் உடைப்பு ஏற்பட்டு சீரமைக்கப்பட்ட நிலையில், நேற்று மேற்பனைக்காடு கிராமத்தில் பாசன ஏரிக்கு தண்ணீர் மதகு சுவர் உடைந்து தண்ணீரில் கொட்டியது. இதனால் கரை உடைப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் விவசாயிகளிடம் எழுந்தது.
இந்த செய்தியை நேற்று படங்களுடன் நக்கீரன் இணையத்தில் “கல்லணை கால்வாயில் ஷட்டர் சுவர் உடைந்து கொட்டியதால் பரபரப்பு” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம்.
நக்கீரன் இணைய செய்தி வெளியான நிலையில், ஆயிங்குடி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதகு சுவர் உடைந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்து உடனடியாக சுவர் உடைந்த இடத்தில் இருந்து உடைப்பு ஏற்படாத வகையில், தடுப்பு கட்டைகள் அமைத்து மணல் மூட்டைகள் அடுக்கி தற்காலிகமாக சீரமைத்தனர்.
தற்போது தண்ணீா் 150 கன அடி வரை மட்டுமே செல்வதால் பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை. ஆனால் தண்ணீர் அதிகம் வரும்போது பாதிப்புகள் ஏற்படாத வகையில் நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என்கிறார்கள் விவசாயிகள்.
மேலும் இதே போல 20க்கும் மேற்பட்ட மதகுகள் உடைந்துதான் காணப்படுகிறது. அதை அதிகாரிகள் சீரமைக்காமல் வைத்திருப்பதால் அடிக்கடி இப்படி நடக்க வாய்ப்புகள் உள்ளது என்கிறார்கள்.