Skip to main content

தஞ்சை அருகே கல்லணை கால்வாயில் உடைப்பு.. குடிமராமத்து நிதி 2.78 கோடி என்னாச்சு? 

Published on 08/10/2018 | Edited on 08/10/2018
ri

 

 தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு மேல உளூர் அருகே கல்லணைக்கால்வாய் கிளை ஆறான கல்யாண ஓடையில் உடைப்பு ஏற்பட்டு வயல்வெளிகளில் கரைபுரண்டு ஓடுகிறது தண்ணீர்.
   கடந்த மாதம் இதே போல தஞ்சை அருகே உடைப்பு ஏற்பட்டதால் கல்லனை கடைமடை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதுடன் முறை தண்ணீர் விடப்பட்டது. இதனால் பட்டுக்கோட்டை, பேராவூரணி, மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கடைமடை பாசனப்பகுதிகளான கறம்பக்குடி ஒன்றியம் மற்றும் மேற்பனைக்காடு, வல்லவாரி, ஆயிங்குடி, நாகுடி வரை விவசாயம் செய்ய முடியாமல் தவித்த விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் பயனில்லை. அதனால் தற்போது வரை நடவுப்பணிகள் தொடங்காமல் உள்ளது.


இந்த நிலையில் தான் கல்லணை கால்வாயில் இருந்து மேல உளூர் அருகே உள்ள திறப்பிலிருந்து பிரிந்து செல்லும் கல்யாண ஓடை கால்வாயில் இன்று திடீரென ஏற்பட்ட உடைப்பால் வேகமாக தண்ணீர் வெளியேறி தைலமரக்காடு மற்றும் விளை நிலங்களுக்குள் ஓடுகிறது. 


தகவல் அறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக தண்ணீரை நிறுத்தி தடுப்பு அமைக்கும் பணியை தொடங்க உள்ளனர்.


   ஆனால் தஞ்சாவூர் கல்லணை வடிநில கோட்டத்தில் குடிமராமத்து செய்ததாக ரூ 2.78 கோடி எடுக்கப்பட்டுள்ளது. குடிமராமத்து செய்திருந்தால் இப்படி அடிக்கடி உடைப்பு ஏற்படுமா? மராமத்து பணிகள் செய்யாமல் பணம் எடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் இதை காரணம் காட்டி தண்ணீ்ர் திறப்பதை குறைத்து மதுக்கூர் வரை தண்ணீர் செல்லவிடாமல் தடுக்கும் முயற்சிகள் நடக்கும். இந்த தண்ணீரை நம்பி நடவு செய்த விவசாயிகளின் நிலை தான் பரிதாபமாக உள்ளது என்கின்றனர் விவசாயிகள்.

 

சார்ந்த செய்திகள்