Skip to main content

குடிநீர் பற்றாக்குறை; மாணவர்களுக்காக மறியலை கைவிட்ட பெண்கள்

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

kallakurichi vadakananthal water scarcity incident cancel due to public exam 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கநந்தல் பேரூராட்சியில் வசிக்கும் மக்களுக்கு சில மாதங்களாக குடிதண்ணீர் பற்றாக்குறை இருந்து வந்துள்ளது. ஏற்கனவே நிலத்தடி நீர் போர்வெல் மூலம் போதுமான அளவுக்கு குடிதண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சாலைப்பணியின் காரணமாக பைப்லைன் சேதமடைந்துள்ளது. இதனால் குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

 

இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நிர்வாகம் கண்டுகொள்ளாததால் அப்பகுதி பெண்கள் ஒன்று திரண்டு கச்சராப்பாளையம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் செல்லும் சாலையில் அக்ராபாளையம் மாரியம்மன் கோவில் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கச்சராப்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ளாத பெண்கள் மறியலை தொடர்ந்தனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

 

இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் பிளஸ்டூ தேர்வு நடைபெற்ற நிலையில் அப்பகுதியில் சின்னசேலம், கள்ளக்குறிச்சி போன்ற ஊர்களில் உள்ள பள்ளிகளுக்கு மாணவ மாணவிகள் பேருந்தில் சென்று தேர்வு எழுதுவதற்கு அரசு பேருந்துகள் மூலம் புறப்பட்டு வந்தனர். அவர்கள் அனைவரும் இந்த சாலைமறியலில் சிக்கிக் கொண்டனர். தேர்வு எழுதச் சென்ற மாணவ மாணவிகள் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் சென்று இன்று அரசு பொதுத்தேர்வு எங்களுக்கு அனைவருக்கும் நடக்க உள்ளது. அதை எழுத முடியாவிட்டால் எங்கள் படிப்பு, வாழ்க்கை அனைத்தும் கேள்விக்குறியாகிவிடும். எனவே, எங்கள் அனைவரையும் உங்கள் வீட்டுப் பிள்ளைகளாக எண்ணி தேர்வு எழுதச் செல்வதற்காக பேருந்து செல்ல விடுங்கள் என்று கேட்டுக் கொண்டனர்.

 

சாலைமறியலில் ஈடுபட்ட பெண்கள் பள்ளிப்பேருந்து உட்பட அனைத்து வாகனங்களும் செல்ல போக்குவரத்திற்கு வழிவிட்டு கலைந்து சென்றனர். இதைக் கண்டு மாணவ மாணவிகள் மறியலில் ஈடுபட்ட பெண்களுக்கு நன்றி தெரிவித்தனர் இதையடுத்து வடக்கநந்தல் பேரூராட்சி அலுவலர்கள் அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்வதாக உறுதி அளித்தனர்.

 

இந்த சம்பவத்தால் அக்ராபாளையம் வடக்கநந்தல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்