கவர்னருக்கு அடிமையாக, மத்திய அரசுக்கு அடிமையாக, மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய வகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருப்பதாக திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நேற்றைய தினம் கவர்னர் மாளிகையில இருந்து ஒரு செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. ஆங்கில பத்திரிக்கை தி இந்துவில் அந்த செய்தி வந்திருக்கிறது. அதில், முதல் அமைச்சருக்கே தெரியாமல், அரசுக்கே தெரியாமல் கவர்னர் மாளிகையில் இருந்து தலைமைச் செயலாளராக இருக்கக்கூடிய கிரிஜா வைத்தியநாதன் அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு கூட்டங்களை ஏற்பாடுகள் செய்து, அந்த அடிப்படையில்தான் ஆய்வு செய்வதாக செய்தி வந்திருக்கிறது.
இந்த செய்தி அரசுக்கு தெரியுமா? முதல் அமைச்சருக்கு தெரிந்துதான் நடக்கிறதா? அப்படியிருந்தால் ஏற்கனவே முதல் அமைச்சர் விளக்கம் தந்திருக்க வேண்டும். அரசு சார்பில் இருந்து விளக்கம் தந்திருக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்பு இதே ஆளுநர் மாளிகையில் இருந்து ஆய்வு நடத்துவதற்காக செல்லவில்லை என்று ஒரு அறிக்கை வந்தது. ஆனால் இன்றைக்கு தலைமைச் செயலாளர் ஒப்புதலோடு, அவருக்கு தகவல் தெரிவித்துவிட்டுதான் ஆய்வு நடத்துகிறோம். நடத்திக்கொண்டிருக்கிறோம் என்று செய்தி வருகிறது.
இதுபற்றி பேச வேண்டும் என்று கேட்ட நேரத்தில், குறிப்பாக முதல் அமைச்சர் விளக்கம் சொல்ல வேண்டும் என்று கேட்டேன். ஆனால் வாய் மூடி அமைதியாகவே இருந்தார். அவர் அமைதியாகவே இருந்த காரணத்தினால் நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்று சொன்னால் கவர்னருக்கு கட்டுப்பட்டு ஒரு ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது. கவர்னருக்கு அடிமையாக, மத்திய அரசுக்கு அடிமையாக, மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய வகையில், மாநில உரிமைகளையெல்லாம் பறிக்கக்கூடிய நிலையில் ஒரு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இரட்டை ஆட்சி நடக்கிறது. கவர்னர் ஆட்சி. மற்றொன்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி ஒரு அடிமையான ஆட்சி போல நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு கூறினார்.