கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மெய்யாத்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அதே ஊரை சேர்ந்த ஏழுமலை, உமா தம்பதியரின் இளைய மகள் துர்காதேவி (13) அதே பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வருகிறார். மாணவி கல்வியில் சிறந்து விளங்கியதாலும் அவரது வீடு பள்ளிக்கு அருகில் உள்ளதாலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவியிடம் தினந்தோறும் காலையிலே பள்ளியை திறக்ககோரி சாவியை கொடுத்துள்ளார்.
அதன்படி மாணவியும் பள்ளியை தினம்தோறும் திறந்து வைத்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவி துர்கா புதன்கிழமை காலை 8 மணிக்கு வீட்டில் இருந்து சாவியை எடுத்துக்கொண்டு பள்ளியை திறக்க சென்றுள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு வரவில்லை. மாணவியின் பெற்றோர்கள் தேர்வு நேரம் என்பதால் பள்ளியிலே உட்கார்ந்து படித்துக்கொண்டு இருக்கலாம் என்று எண்ணி வீட்டிலே இருந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பள்ளிக்கு வந்த மாணவர்களில் ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது மாணவி தூக்கில் தொங்கிய நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறிஅடித்துக்கொண்டு ஓடி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களிடம் கூறியுள்ளார்.
அதனைதொடர்ந்து குமராட்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் தேன்மொழி கூறுகையில், மாணிவியின் சாவில் மர்மம் உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இந்த பகுதியில் தொடர்ந்து நடைபெறுகிறது. பள்ளியின் ஆசிரியர்களிடம் சரியான முறையில் விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகு எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம் என்கிறார்.