பந்தநல்லூர் கோயிலை சுற்றியுள்ள அகழியை உயர்நீதிமன்ற உத்தரவின்படி உடனடியாக தூர்வார வேண்டும் என சமூக ஆர்வலர்களும், விவசாய சங்கங்களும், பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவிற்கு உட்பட்ட பந்தநல்லூரில் புகழ்பெற்ற பசுபதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அந்த கோயிலை சுற்றி ஆயிறம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட அகழியும் இருக்கிறது. சமீபகாலமாக அகழியின் பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி அதற்கான அடையாளத்தை இழந்து காணப்படுகிறது.
இந்த நிலையில் பந்தநல்லூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்ட சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில், பந்தநல்லூர் அகழியை தூர்வாரி நீராதாரத்தை காக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் " அகழியை மூன்று வாரத்திற்குள் தூர்வார வேண்டும், அகழியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்" என உத்தரவிட்டது. அதன்படி ஆக்கிரமிப்புகள் இரண்டு வார காலமாக அகற்றப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே ஆக்கிரிமிப்பாளர்கள் சிலர் " தங்களுக்கு அகழியில் பட்டா இருக்கிறது என 30- க்கும் மேற்பட்டோர் தடை கேட்டு நீதிமன்றம் சென்றனர். நீதிமன்றத்தில் தனி நீதிபதி அமர்வில் விசாரிக்கப்பட்டு நான்கு வாரங்களுக்கு அவர்களின் இடத்தில் உள்ள ஆக்கிரமைப்புகளை அகற்ற வேண்டாம் என இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
அதன் பின்னர் 23.8.2019 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று வருவாய்த்துறை அலுவலர்கள் பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலை சுற்றியுள்ள அகழியை தூர்வார மூன்று ஜே.சி.பி இயந்திரங்களோடு வந்தனர். இதை அறிந்த ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் அவர்களை பணி செய்ய விடாமல் இயந்திரத்தின் முன் நின்று கூச்சலிட்டனர். இந்த செய்தி காற்றில் தீயாக பரவ பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும், வணிகர்களும் கோபத்தின் உச்சத்திற்கே சென்று கோயிலுக்கு செல்லும் நுழைவு வாயில் அருகே பந்தநல்லூர் குடந்தை சாலையில் திரண்டனர்.
சுமார் 500 பேர் திரண்டு வந்து நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அகழியை தூர்வார வேண்டும் எனவும், சென்னை உயர் நீதிமன்ற ஆணையை நிறைவேற்ற வேண்டும் என்று கோஷமிட்டு கொண்டு பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து சில மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு திருவிடைமருதூர் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரிமிப்பாளர்களுக்கு, இன்னும் ஒரு வாரம் காலக்கெடு இருக்கிறது. அதற்குள் அவர்கள் ஆக்கிரமிப்பை அவர்கள் அகற்ற வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குள் அகற்றவில்லை என்றால் நீதிமன்ற ஆணையை நிச்சயமாக நாங்கள் நிறைவேற்றுவோம் என்று உறுதி அளித்ததன் பேரில் மறியலை தற்காலிகமாக கைவிட்டனர்.
பந்தநல்லூர் பகுதி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கூறுகையில், " நீர்நிலைகளின் முக்கியத்துவத்தை கருதி தமிழக அரசே நீர்நிலைகளை புதுப்பிக்கிறது. பல இடங்களில் நீதிமன்றமும், நீதிபதிகளுமே சொந்த செலவில் தாங்களே முன்னின்று குளங்களை, ஏரிகளை தூர்வாரி வருகின்றனர். அரசர் காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு பொக்கிஷம். இதை ஆக்கிரிமித்து ஒரு சிலர் கடைகளையும், வீடுகளையும், கட்டிக்கொண்டு பட்டா இருக்கிறது என பொய் பிரச்சாரம் செய்து கொண்டு, நீர்நிலைகளை தூர்வார விடாமல் தடுத்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நீதிமன்ற உத்தரவை ஏற்று ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வாரவில்லை என்றால் பந்தநல்லூரை சுற்றியுள்ள நாற்பது கிராம பொதுமக்களையும், அரசியல் கட்சியினரையும், மாணவர்களையும் ஒன்றுதிரட்டி பெருந்திரல் போராட்டம் நடத்துவோம்." என்கிறார்கள்.