கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி லலிதா வயது 38. இவர், தியாகதுருகம் கடை வீதியில் பெண்களுக்கான அழகு நிலையம் நடத்தி வந்துள்ளார். இவரது மகள் 18 வயது தர்ஷினி. இவர், புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அறுவை சிகிச்சை மயக்கநிலை நிபுணர் சம்பந்தமான பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
பாலமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் லலிதாவும் அவரது மகள் தர்ஷினியும் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளனர். இவர்களுக்குப் பாதுகாப்பாக லலிதாவின் தந்தை மகளுடனேயே வசித்து வந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் அவரும் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து மதியம் 12 மணியளவில் மகளுடைய வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளார். வீட்டின் கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.
வெளியில் இருந்தபடியே கதவை திறக்குமாறு அவர் குரல் கொடுத்துள்ளார். ஆனால், கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர், அக்கம் பக்கத்தினரை அழைத்து அவர்களின் உதவியுடன் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தபோது, லலிதா மற்றும் அவரது மகள் தர்ஷினி ஆகிய 2 பேரும் ஒரே சேலையில் தூக்குப்போட்டுத் தொங்கியபடி இறந்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், கதறி அழுதுள்ளார்.
உடனடியாக இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தாய், மகள் ஆகிய இருவரது உடலையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவர்கள் 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தாய், மகள் ஆகிய இரு உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் மகள் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.