கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே மதுரா மைக்ரோ பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் கடந்த ஐந்தாண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சங்கராபுரம் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த ஏழை எளிய மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு இந்த நிறுவனம் குறைந்த வட்டியில் வாரக்கடன் மற்றும் மாதக்கடன் கொடுத்து அதை வசூலித்து வருகிறது.
இந்நிறுவனத்தில் துணை மேலாளராக சங்கராபுரம் அருகே உள்ள மரூர் கிராமத்தைச் சார்ந்த கண்ணுசாமி மகன் ஐயப்பனும், மக்கள் தொடர்பு பணியாளர்களாக தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைவேல் மகன் தினேஷ் மற்றும் மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் அய்யப்பன் ஆகியோரும் பணியாற்றி வந்துள்ளனர். மகளிர் சுயஉதவிக் குழு பெண்களிடம் அந்நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்ட கடன்தொகையை கிராமங்களுக்கு சென்று வசூல் செய்து அந்தப் பணத்தை அந்த நிறுவனத்தில் செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சுமார் 40க்கும் மேற்பட்ட மகளிர் குழுக்களிடம் வசூல் செய்த சுமார் 17 லட்சத்து 98 ஆயிரம் ரூபாயை நிறுவனத்தில் செலுத்தாமல் பணத்தை கையாடல் செய்துள்ளனர். இது சம்பந்தமாக சங்கராபுரம் காவல்நிலையத்தில் நிறுவனத்தின் கிளை மேலாளர் அய்யனார் கொடுத்த புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மதுரா மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியோடு இந்தியாவில் ஏழு மாநிலங்களில் 15 ஆண்டுகளாக இயங்கி வருவதாகவும், மேற்படி நிறுவனம் மகளிரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் குடும்ப வருமானத்தைப் பெருக்கவும், பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடனாக நிதி அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மகளிர் குழுக்கள் திரும்ப செலுத்தும் நிதியை வாரத்திற்கு ஒருமுறை, இரண்டு வாரத்திற்கு ஒருமுறை, மாதம் ஒரு முறை என்று பணியாளர்கள் மூலம் வசூலித்து வந்ததாகவும், சில மாதங்களாக உறுப்பினர்களிடமிருந்து மகளிர் குழுவிலுள்ள பெண்கள் கட்டிய பணத்தை நிர்வாகத்திடம் செலுத்தாமல் நிலுவை காட்டுவதாகவும் வாடிக்கையாளர்களிடமிருந்து புகார் வந்ததையடுத்து அந்த நிறுவனம் தணிக்கை குழுவை வைத்து தணிக்கை செய்த போது நிறுவனத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றி ஐயப்பன், தினேஷ், அய்யப்பன் ஆகிய மூவரும் நிறுவனத்தில் செலுத்த வேண்டிய சுமார் 17 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் பணத்தை கையாடல் செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சங்கராபுரம் காவல்துறையினர் இந்த புகாரை கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஐயப்பன், தினேஷ், அய்யப்பன் ஆகிய மூன்று நபர்களும் 17 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்தது உறுதியானது.
இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மூன்று குற்றவாளிகளையும் தேடி வந்த நிலையில், இன்று சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் அந்நிறுவனத்தின் உதவி மேலாளர் மரூர் ஐயப்பனையும், சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தேவபாண்டலம் தினேஷையும் கைது செய்து சங்கராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மூக்கனூர் ஐயப்பனை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.