![dddd](http://image.nakkheeran.in/cdn/farfuture/kZAOILgYf7B20Cu45W9E29JLSL4TNEdBFck56-vEvvA/1606305423/sites/default/files/inline-images/307_9.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் உத்தரவுப்படி, நிவர் புயலை எதிர்கொள்வதற்காக, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கல்வராயன்மலை, உளுந்துார்பேட்டை, சங்கராபுரம், திருக்கோவிலுார் ஆகிய 6 போலீஸ் நிலையங்களில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
அந்தந்த போலீஸ் நிலையங்களில் உள்ள சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மீட்புக் குழுவில், பேரிடர் மேலாண்மை மீட்பு தொடர்பாக பயிற்சி பெற்ற 10 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரிஃப்ளக்டர் உடை, கடப்பாரை, மண்வெட்டி, கொடுவாள், கயிறு, டார்ச் லைட் ஆகிய உபகரணங்களும் மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் பொக்லைன் இயந்திரமும் வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளப் பாதிப்பு ஏற்படும் இடமாகக் கருதப்படும் பகுதிகளில், இக்குழுவினர் தயார் நிலையில் இருப்பார்கள். குறிப்பாக, 'கனமழையால் பாதிக்கப்படும் கிராமங்களில் பொதுமக்களை மீட்டு பத்திரமான இடத்திற்குக் கொண்டு செல்வது', 'காற்றின் வேகத்தால் மரம், மின்கம்பம் விழுந்து வீடு சேதமடைந்தால், குடியிருப்பவர்களை மீட்பது', 'சாலையில் விழும் மரங்களை உடனடியாக அகற்றி போக்குவரத்தைச் சீரமைப்பது' உட்பட பல்வேறு மீட்புப் பணிகளை இக்குழுவினர் மேற்கொள்வர்.