திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளபட்டி மெயின் ரோட்டில் அதிமுக பிரமுகரான காளியப்பன் பெட்டிகடையில் மது குடித்த இருவர் பலியான சம்பவத்தில் அந்த மது கள்ள மது அல்ல விஷம் கலந்த மது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கவுண்டன்பட்டி சேர்ந்த முருகன், சாண்டலர்புரத்தை சேர்ந்த சாய்ராம், பாஞ்சாலங்குறிச்சி சேர்ந்த தங்கம் ஆகிய மூன்று கூலி தொழிலாளர்கள் வழக்கம்போல் நேற்று அதிகாலையில் அந்த அதிமுக பிரமுகர் பிரமுகரான காளியப்பன் பெட்டிக்கடையில் வழக்கம் மது வாங்கி குடித்தனர். அதன்பின் அந்த மூன்று குடிமகன்களும் போதை மப்பில் ஊருக்கு சென்றுகொண்டு இருக்கும்போது திடீரென ஒவ்வொருவரும் தனித்தனியாக மயங்கி விழுந்து கிடந்தனர்.

அதைக்கண்ட அப்பகுதியில் போய்க்கொண்டிருந்த மக்களோ போதையில் கிடக்கிறார்கள் என்று நினைத்து சென்றுவிட்டனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த குடிமகன்களின் வாயில் நுரை தள்ளி கிடப்பதைக்கண்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் பதறி அடித்து கொண்டு அருகே உள்ள அம்மையநாயக்கனூர் போலீசிஸ்க்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் பார்த்தபோது வாயில் நுரை தள்ளிய முருகன் இறந்து கிடந்தார் மற்ற இரண்டு பேரும் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு 108 ஆம்புலன்ஸ் வர சொல்லி அருகே உள்ள வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே சாய்ராம் உயிரிழந்தார்.

அதனைத்தொடர்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தங்கத்தை மதுரைஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்படி இருந்தும் தங்கமும் போகும் வழியிலேயே இறந்ததாக தெரிகிறது. இப்படி மூன்று பேரும் போலிமது குடித்து இறந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கினார்கள். இதுபற்றி அப்பகுதியை சேர்ந்த மக்களிடம் கேட்டபோது... இந்த பெட்டிகடையில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்துவருகிறார்கள். ஆனால் இந்த மது பாட்டில்களை எங்கிருந்து வாங்கி வருகிறார்கள் என்று தெரியாது போதைக்காக மாத்திரைகளை கலந்து போலி மதுவாக கூட விற்பனை செய்கிறார்கள். அதுபோல் கலப்பட மது பாட்டில் களையும் விற்பனை செய்கிறார்கள். அப்படிப்பட்ட மதுவை குடித்ததால் தான் அந்த மூன்று கூலி தொழிலாளிகளும் இறந்து இருக்கலாம் என்று கூறினார்கள்.
மாவட்ட அளவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரணை செய்துவந்த நிலையில் இச்சம்பவத்தில் அவர்கள் குடித்தது போலி மது அல்ல விஷம் கலந்த மது என போலீசார் முதல்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர்.