ஒரு புறம் மாணவர்களிடம் கலந்துரையாடல்... மறுபுறம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் சிறப்பு முகாம்...இன்னொரு பக்கம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு சாதுர்யமாக தீர்வு... என பன்முகம் காட்டும் வித்தகராக இருக்கிறார் சரவணன் - நெல்லை டி.சி.
சென்னையில் இருந்து நெல்லைக்கு மாறுதலாகி வந்த 3 மாதத்திலேயே தனது சிறப்பான பணியின் மூலம் மக்களை கவர்ந்துவிட்டார். "மக்களை நோக்கி மாநகர காவல்" என்ற புதுமையான திட்டத்தை இவர் அறிமுகம் செய்திருக்கிறார்.
இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு வார இறுதியிலும் ஏதாவது ஒரு பகுதியை தேர்வு செய்து அந்தந்த காவல் நிலையை அதிகாரிகள், காவல் ஆளினர்கள் மக்களுடன் சந்திப்பு நடத்த வேண்டும். அந்த பகுதியில் உள்ள பிரச்சனைகள், அவற்று தீர்வு காண்பது குறித்து அப்போது ஆலோசிக்கப்படுகிறது. சாலை விதிகளை பின்பற்றுவது குறித்தும், குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
அதேபோல், ஒவ்வொரு பள்ளிக்கூடங்களுக்கும் சென்று மாணவர்கள் மத்தியில் உரையாடும் துணைஆணையர் சரவணன், மாணவர்களுக்கு தனது முகவரி எழுதிய அஞ்சல் அட்டை கொடுத்திருக்கிறார். உங்கள் கண்ணுக்கு தவறாக தெரிகின்ற எந்த விஷயங்களையும் எழுதி அனுப்பலாம் என்றிருக்கிறார். அதுமட்டுமின்றி பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் காட்டும் அக்கறையும் மெச்சும்படி இருக்கிறது.
அதேபோல், இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரும் வகையில், நெல்லையில் சிறப்பு முகாமையும் நடத்தி அனைவருடைய பாராட்டை பெற்றார். 200சிசி பைக்கில் சாகசம் செய்த இளைஞர்கள் 11 பேரை பிடித்து, பாளையங்கோட்டை ஐகிரவுன்ட் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டு படுத்துக்கிடக்கும் நோயாளிகளின் அவஸ்தையை கண்கூடாக பார்க்கவைத்தார்.
"ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக் வைத்திருப்பவனுக்கு அபாரதம் செலுத்துவது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. கை, கால் உடைஞ்சா எப்படியெல்லாம் கஷ்டப் படுவோம்னு அவங்களுக்கு புரிய வச்சோம். அவங்களும் புரிஞ்சுகிட்டாங்க..."இவ்வாறு மாற்றி யோசிப்பதன் மூலம் இளைஞர்களை நல்வழிப்படுத்திட முடியும் என்ற ஆத்ம திருப்தி அவருக்கு கிடைத்திருக்கிறது.
ஒருபுறம் சமூக பணிக்கு காட்டும் முக்கியத்துவத்தை போன்று, நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி கொலை வழக்கில் துப்பு துலக்கி குற்றவாளியை பிடித்ததிலும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பலரை குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ளியது, நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா, விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ஆகியவற்றை பிரச்சனையின்றி முடித்து வைத்ததில் சரவணனுக்கு முக்கிய பங்கு உள்ளது.
"நமது நெல்லை-பாதுகாப்பான நெல்லை" என்ற பொறுப்புணர்வோடு களப்பணியாற்றும் சரவணன், டுவிட்டர், பேஸ்புக் பக்கத்திலும் பல்வேறு கருத்துக்களை பகிர்கிறார். அவற்றுக்கு நல்ல ரெஸ்பான்சும் கிடைத்திருக்கிறது. ரசிகர்கள் தங்களது அபிமான நட்சத்திரங்களுக்கு பேனர் வைப்பதற்கு பதிலாக ஆக்கப்பூர்வ பணிகளை செய்யலாம் என பதிவிட்டார். உடனே சூர்யா ரசிகர்கள் சூர்யாவின் 'காப்பான்' படம் வெளியீட்டின்போது 200 பேருக்கு ஹெல்மட் கொடுப்போம் என வாக்குறுதி அளித்தனர்.
2003-ல் நெல்லை மாநகரை மையப்படுத்தி சாமி என்ற திரைப்படம் வெளிவந்தது. அதில் விக்ரம் நெல்லை மாநகர டி.சி கேரக்டரில் ஆறுச்சாமி என்ற கதாபாத்திரத்தில் நடத்திருப்பார். வில்லனாக நடித்த கோட்டா சீனிவாச ராவ், விக்ரமை பார்த்து 'நீ வந்தபிறகு சிட்டியே நல்லா மாறி இருக்குன்னு நம்ம பயலுவ பேசிக்கிறாங்க' என்பார். அந்த ஆறுச்சாமியின் பெயர் சரவணனுக்கு பொருந்தும் என்கின்றனர் நெல்லை மக்கள்...!