இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின் போது 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி (19.02.2024) தாக்கல் செய்தார். அப்போது அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “தமிழ்நாடு அரசால் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம் தொடங்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பி.பொன்னையா வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறையில், “கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3 ஆயிரத்து 100 கோடி செலவில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும். இந்த வீடுகள் அனைத்தும் 360 சதுர அடியில் சமையலறையுடன் இருக்க வேண்டும். அதில் 300 சதுர அடி ஆர்.சி.சி. (RCC) கூரையுடனும், மீதமுள்ள 60 சதுர அடிக்கு தீப்பிடிக்காத கூரையாக அமைக்கப்பட வேண்டும். வீட்டின் சுவர்கள் செங்கல், இன்டர்லாக் பிரிக் மற்றும் ஏஏசி பிளாக் உள்ளிட்டவற்றால் கட்டப்பட வேண்டும். அதாவது தீப்பிடிக்காத பொருளில் அமைக்கப்பட்ட கூரையாக இருக்க வேண்டும். எனவே ஓலை அல்லது அஸ்பெஸ்டாஸ் கூரைகள் அமைக்கப்படக்கூடாது. மண்ணால் கட்டப்படும் சுவர்கள் கூடாது.
ஒரு வீட்டுக்கான தொகை அனைத்தையும் சேர்த்து ரூ.3.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். கிராம ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், உள்ளிட்டோர் அடங்கிய குழு இத்திட்டத்திற்கு தகுதியான பயனாளியைத் தேர்வு செய்ய வேண்டும். குடிசை வீடுகள் பற்றிய சர்வே விவரங்களை மே 31 ஆம் தேதிக்குள் ஊரக வளர்ச்சித்துறை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். அனைத்து குடிசைகளையும் ஆய்வு செய்து தகுதியின் அடிப்படையில் ஊராட்சி தலைவர், உதவி பொறியாளர், வட்டார பொறியாளர், வார்டு உறுப்பினர் குழு பயனாளிகளைத் தேர்வு செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.