மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி நடந்து வரும் போராட்டத்தின் தொடர்ச்சியாக வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் சேயோன் தலைமையில் வழக்கறிஞர்கள், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். நாகை மாவட்டத்தில் இருந்து வரும் மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தைப்பிரித்து சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி தனி மாவட்டாமாக அறிவிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக பல போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 18- ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரில் நெல்லையைப்பிரித்து தென்காசியையும், காஞ்சிபுரத்தைப் பிரித்து செங்கல்பட்டையும் புதிய மாவட்டமாக அறிவித்த முதல்வர் பழனிச்சாமி கும்பகோணம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய மாவட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். இந்த அறிவிப்பு மயிலாடுதுறை மக்களிடையே கடும் கோபத்தை ஏறபடுத்தியது.
கடந்த நான்கு நாட்களாக மூன்று தொகுதி வர்த்தகர்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். ஆட்டோ ஓட்டுனர்கள், தட்டுவண்டி உள்ளிட்ட தொழிலாளர்கள் கருப்புக்கொடி கட்டிக்கொண்டு வேலையில் ஈடுபடுகின்றனர். வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இந்த போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி வரும் வழக்கறிஞர் சேயோனிடம் கேட்டோம், " நாங்கள் தனி மாவட்டம் கேட்பது நேர்மையானது, இன்றல்ல நேற்றல்ல கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக அறவழியில் அரசின் மீது நம்பிக்கை வைத்து போராடி வருகிறோம், ஆனால் அரசு வேண்டுமென்றே புறக்கணிப்பது. போல், இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மயிலாடுதுறையை புறக்கணிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு தனி மாவட்டம் கிடைக்கும் வரை இனி போராட்டம் ஓயாது, முதல் நாள் நீதிமன்றத்தை புறக்கணித்தோம், பிறகு கோட்டாச்சியரிடம் மனு அளித்தோம், மறுநாள் சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டோம், அதன் பிறகு லட்சம் பேர் எழுதிய போஸ்ட் கார்டுகளை முதல்வருக்கு அனுப்பியுள்ளோம், இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம், தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்போகிறோம், போராட்டம் தொடரும்." என்றார்.