நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் சென்னை பல்லாவரத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசுகையில், “ஒரு நாட்டின் இறையாண்மை சம்பந்தப்பட்ட விஷயத்தையம் பாதுகாப்பு விஷயத்தையும் தேர்தலுக்காக தான் பேச வேண்டும் என்பதில்லை. இந்த விசயத்தை எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பேசலாம். இது புவியியல் சார்ந்த விசயம். அது நமது உரிமை. அதனால் இப்போது பேசப்படுகிறது. கச்சத்தீவு தொடர்பாக சராசரியாக கடந்த 50 ஆண்டுகளாக உண்மைக்குப் புறம்பான பிரச்சாரம் நடந்து வருகிறது. பொறுப்பில்லாத பேச்சுக்கள் நிறைய பேசப்படுகின்றன.
கச்சத்தீவு நமது மீனவர்கள் வாழ்க்கையின் ஓர் அங்கம் ஆகும். மேலும் பொருளாதார மண்டலத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படி இருக்கையில் கச்சத்தீவைப் பற்றி பேசக்கூடாது என எப்படி சொல்ல முடியும். தி.மு.க. - காங்கிரஸ் கட்சிகள் அப்போதும் கூட்டணி வைத்திருந்தனர். இப்போதும் கூட்டணி வைத்துள்ளனர். கச்சத்தீவு குறித்து பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. காங்கிரஸ் ஒரு தேசிய கட்சியாக இருந்துகொண்டு அதற்கு விளக்கம் கொடுக்காமல் அதைப் பற்றி பேசக்கூடாது என்று சொல்கிறது. கச்சத்தீவை இழந்தது காங்கிரஸ் ஆட்சியில் தான். நேரு தனது கடிதத்தில் கச்சத்தீவை ஒரு தொல்லை. கச்சத்தீவு சீக்கிரம் கை விட்டுப் போனால் நிம்மதி என்று கூறியுள்ளார். இந்திராவோ கச்சத்தீவை ஒரு சிறிய கல் பாறை என்று கூறியுள்ளார். அப்போதைய முதல்வர் கலைஞர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தேர்தல் நேரம் என்பதால் இதனைப் பற்றி பேசவில்லை.
தமிழக மக்களுக்கு விரோதமான செயல்களை காங்கிரஸ் கட்சி செய்யும்போது தி.மு.க. அமைதி காத்து வந்தது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தடை விதித்தபோதும் காங்கிரஸ் உடன் தி.மு.க. கூட்டணி வைத்திருந்தது. கச்சத்தீவு விவகாரத்தில் கடந்த 10 ஆண்டுகளாக என்ன செய்தோம் எனக் கேட்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் கச்சத்தீவு தொடர்பாக இரண்டு ரிட் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அது விசாரணைக்கு வரும்போது அதைப்பற்றி பேச முடியும்” எனத் தெரிவித்தார்.